பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 207


அறிஞர் அண்ணாவுடன் சிலர் உடனிருந்து அவரின் சிறப்புடை நண்பர்போலப் பழகி அவரின் குறைகளை எழுதிக்காட்டினாரே, அவர் நண்பரா? தோழரா? இல்லை, பகைவரா? இம் மூவரிலும் அவர் சேரமாட்டார். பகைவர்கூட வெளிப்படையாகப் பகைப்பதால் நம்மை எளிதில் பழிதுாற்றமுடியாது. நமக்குத் தீங்கு செய்யமுடியாது. இவர் இம் மூவரிலும் இல்லையானால் வேறு யார்? இந்தப் பட்டியலில் வைத்தெண்ணப்படத் தகுதியில்லாதவர்கள் கயமை (எண் 108) அதிகாரத்தில் சேர்க்கப்பட வேண்டியவர்கள். சிறந்த நட்பு, பிறைநிலாப் போல வளருமாம். நிலா குளிர்ச்சியைத் தருவது; உணர்வைத் துாண்டி வளர்ப்பது; இன்புறுத்துவது, பைங்கூழ்களை வளர்ப்பது, இத்தனை பணிகளையும் நட்புச் செய்யவேண்டும். நட்பு உவப்பனவே செய்யுமா? ஆம், உவப்பனவே செய்யும்.

மிகுதிக்கண் மேற்சென்றிடித்தலும் உவப்புத்தானா? ஆம், அப்பொழுதும் உவப்புத்தான். நட்பிற்குரியோன் சோர்வின் காரணமாக நெறியல்லா நெறியில் செல்லும் பொழுது அவனை இடித்துத் திருத்தலும் நெறி நிறுத்தும் பணிதானே தவிர அது பழி கூறுவதன்று. இடித்துக் கூறுதல் என்பது வேறு; பழிதூற்றுதல் குற்றங்களை விரித்தல் என்பது வேறு. அங்ஙனம் இடித்துக்கூறுதல் கூட அயலார் யாருக்கும் தெரியா வகையில் நிகழும். அதனால்தான் போலும் தமிழ் இலக்கியங்களில் இத்தகைய நட்புக்குரிய இலக்கியத்தை நாம் மிகுதியாகப் பார்க்க முடியவில்லை. அகநிலை வழிப்பட்ட காதலை விரித்துரைத்த அளவிற்குக்கூட இத்தகைய நட்புகளை - விரித்துரைக்கும் இலக்கியங்கள் தோன்ற வில்லையே. அயலறியாது நட்பில் திருத்தம் காணவேண்டும் என்ற மரபினைப் போற்றிய நட்பு முறைதான் காரணம் போலும். சிறந்த நட்பு இயல்பான உதவிகளின் வழி நிகழ்வது; அதாவது தூண்டும் தொழிற்பாடின்றியும் கைம்மாறு முதலிய உறுபயன் விளைவுகளால் நிகழாமலும் இயல்பில் நிகழ்வதே