பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

222 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பலகாலும் குளித்தலையும், தண்ணிர் குடித்தலையும் வற்புறுத்துகின்றன. நல்ல உடல், நல்ல மனம் ஆகியவை ஒழுக்கத்தின் விளை நிலங்கள். எனவே, வான் இவ்வுலகிற்குத் தண்ணிர் வளம் தருவதோடு, ஒழுக்கம் சிறக்கவும் உதவுகிறது.

"ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஒம்பப் படும்." (131)

உணர்வார் கண்ணே உலகு

உயிர் ஓர் அறிவுப் பொருள். உயிரின் இயல்பு பெருக்கெடுத்தோடும் வெள்ளத்தின் வழிச் செல்வதன்று. வெள்ளத்தை எதிர்த்து நீந்துவது உயிரின் கடமை. ஆனால் நடைமுறையில் கோடானுகோடி உயிர்கள் இங்ஙனம் வாழ்வதில்லை. இவ்வுலகம் ஐம்பெரும் பூதங்களின் கூட்டினால் ஆனது. இப்பருவுலக நடைமுறைக்கும், உயிரியல் வளர்ச்சிக்கும் நிறையத் தொடர்புண்டு. உயிரின் அனுபவ வாயில்கள் புலன்கள். புலன்களின் அனுபவக் கருவிகள் பொறிகள். அனுபவக் களம் ஐம்பூதங்களாய் உலகமும், பூதங்களின் வழித்தாய உணர்வுகளுமாம். பூதங்கள்-அவைகளாலாய உணர்வுகள் வழியே உயிர்கள் செல்லுமாயின், இம்மையிலும் பயனில்லை, மறுமையிலும் பயனில்லை. அதற்கு மாறாக அவற்றின் கூறுபாடுகளை அறிந்து, அவைகளைத் துய்மை செய்து, உணர்ந்து உணர்வு கொண்டு அனுபவிக்கும்பொழுது வாழ்வின் குறிக்கோள் கைகூடுகிறது. அவர்கள் பக்கத்தில் உலகம் நிலைபெற்றிருக்கும். இக்கருத்தினையே திருவள்ளுவர்.

"சுவையொளி யூறோசை நாற்றமென் றைந்தின் வகைதெரிவான் கட்டே யுலகு." - (27)

என்று பேசுகின்றார்.