பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 283


தீங்கு செய்தார்க்குத் தீங்கு செய்யத் திட்டமிடும் சூழ்ந்து செய்யும். துன்பப்பட்டவன் பொறுப்பை அறக்கடவுள் எடுத்துக் கொள்ளும். பிறருக்குத் துன்பம் விளைவிக்காமல் -- ஆனால், பிறர் இழைக்கும் துன்பத்தால், அவதியுறுபவன் கேடும் இழப்பும் இல்லாமலேயே நலம் பெறுகிறான். காரணம், அறக்கடவுள் அவனுக்குப் பாதுகாப்பாக இயங்குகிறது. அறக் கடவுளின் ஆற்றல் அளப்பரிது. ஆதலால், தீங்கிழைத்தவனை அது துன்புறுத்தியே தீரும். இதனை,

"மறந்தும் பிறன்கேடு சூழற்க; சூழின்
அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு.” (204)

என்று திருக்குறள் வலியுறுத்துகிறது.

இனி, பிறருக்குத் தீமை செய்ய நினைக்கின்ற அளவிலேயே நினைக்கின்றவன் தீமையுறுகின்றான் என்பது சான்றோரின் அனுபவ உரை. “தீங்கு நினைக்கின்றவனுக்கே தீங்கு” "Evil to him who evil thinks" என்பது ஆங்கிலப் பழமொழி. தனக்குத் தீங்கு நேராமல் இன்னொருவனுக்குத் தீங்கு செய்ய முடியாது என்று ஓர் அனுபவ உரையுண்டு.

திருவள்ளுவர், தீமையையும் தீயையும் ஒப்பு நோக்கி தீச் செயலின் இழிநிலையை -- அதன் கொடுமையை நமக்கு உணர்த்துகின்றார். தீ, வைத்த இடத்தில் மட்டுமே எரியும். தீ, வைக்கின்றவனின் கை, பற்றி எரிவதில்லை. தீ, வைக்கப்பெற்ற கூரை மட்டுமே பற்றி எரியும். இது ஒருபால் கேடு.

அது மட்டுமின்றி தீயினை யார் வைத்தாலும் வைத்தவர்களே அணைக்க வேண்டுமென்ற அவசியமில்லாமல் மற்றவரும் அணைக்கலாம். ஏன்? இன்று தீயணைக்கும் படையே இருக்கிறது. ஆனால் ஒருவரிடம் உள்ள தீமையைப் பிறிதொருவர் தணிக்க முடிவதில்லை. ஆனால், முயலலாம். அந்த முயற்சி தூண்டுதலும் வழி நடத்தலும் என்ற அளவிலேயே அமையும். தீமையுடையவர் உணர்வசைந்து உடன்பட்டாலேயே மாறுதல் உண்டு.