பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

292 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்


எவ்வளவு பெற்றாலும் பெற்றதைச் சுருக்கிப் பெறாததையே பெரிதுபடுத்திக் காட்டுவர். பெற்ற உதவிக்கு நன்றி செலுத்தும் இயல்பின்றி, பெறாது போனவைகளுக்குப் பகை காட்டுவர். ஆதலால், ஈதல் இழப்பே எனினும் வறியோர்க்கு ஈதல் வேண்டும். வறியோரினும் இன்றியமையாத் தேவை கிடைத்தவுடன் மனநிறைவு கொண்டு மகிழ்ந்து வாழத் தெரித்தவர்களே இரப்பவர்களாக வந்தால் ஈதல் இனிது இனிது! மீண்டும் மீண்டும் பெற வேண்டும் என்ற பெருவேட்கை யுடையவர்களாக இரக்கப்படுதல் தீதேயாம்.

இன்றைய உலகில் தன் தேவைகள் மட்டுமே தெரிந்தவர்கள் பெருகி இருக்கிறார்கள், கொடுப்பவர் சக்தி அறிந்து கேட்பவர்கள் இல்லை. கிடைத்தமட்டும் பார்க்கலாம் என்ற உணர்ச்சியே மேலோங்கி நிற்கிறது. அதிலும் வறியவர்கள் மட்டும் இரப்பதில்லை. வாழ முடிந்தவர்களும் கூட இரக்கிறார்கள். கொடுப்பதன் மூலம் பெறுகிறவர்களுடைய இனிய மகிழ்ச்சி நிரம்பிய முகத்தைக் காண்பதென்பது இன்றைக்கு அருமையாகிவிட்டது. அப்படியே ஒரோவழி கண்டாலும் நீரின் மேல் சலனத்தைப் போல சில பொழுதேயாம். வாங்கிக் கொண்டேயிருக்கும் போது மகிழ்ச்சி. ஒருநாள் தடைபட்டாலும் மகிழ்ச்சி மறைந்து ஆச்சரியம் தோன்றும்.

இந்த உலகத்தில் எப்படிப் பலர் கேட்கக் கொடுத்து வாழும் வாழ்க்கையை இன்பம் என்று கருத முடியும்? அதனாலன்றோ திருக்குறள்,

"இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்
இன்முகம் காணும் அளவு." (224

என்று உலக நடையை அறிந்து ஓதுகிறது.