பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

308 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்


குறிப்பிடுகின்றார். ஆதலால் திருவள்ளுவர், செல்வம் உடைமைக்கும், இன்மைக்கும் முன்னைத் தவத்தையோ, பயனையோ காரணமாக ஒத்துக் கொள்ளவில்லை.

"இலர்பலர் ஆகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர்."

(270)

என்பது குறள்.

நோன்பு முறை பலப்பல. எல்லா நோன்புகளினுள்ளும் மிகச் சிறந்தது செல்வத்தின்கண் உள்ள பற்று நீங்கி, அவ்வழி தான் பெற்ற செல்வத்தைப் பலருக்கும் வழங்கி அவர் தம் வறுமையை மாற்றுதல். அதனாலன்றோ, ஈகையிலுங்கூட,

"ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்"

(225)

என்று கூறுகின்றார்.

புறநானூற்றிலுங்கூட, கடலுண்மாய்ந்த இளம் பெருவழுதி, இவ்வுலகம் உள்ளதாக விளங்குவதற்குப் பல்வேறு காரணங்களை வகுத்துக் கூறிவிட்டு இறுதி முடிவாக, 'தமக்கென முயலா நோன்றாள் பிறர்க்கென முயலுநர் உண்மையானே' என்று கூறுகின்றார். அதாவது, தனக்கென முயற்சி செய்யாது பிறருக்கென முயன்று பொருள் ஈட்டி வாழ்விப்பான் உள்ளமையானே, உலகம் இருக்கிறது - நடைபெறுகிறது - இயங்குகிறது என்று குறிப்பிடுகின்றார்.

அகநானூற்றிலுங்கூட தலைமகள், தன் தலைவனுக்குத் தன்மீது உள்ள, காதலைவிடப் பொருளின்மீது காதல் அதிகம். ஆதலால், பொருள்வழியிற் பிரிந்து சென்றவன் திரும்பி வருவானோ மாட்டானோ என்று ஐயுறுகின்றாள். தலைமகனுக்குப் பொருள்மீது காதல் மிகுந்தமைக்குக் காரணம் தான் நுகர்ந்து வாழவேண்டும் என்பது அன்று. இல்லாதவர்களுக்கு வழங்கி, அவர்களது வறுமையைத்