பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



திருக்குறள் ☆ 29


களும், பொருளாதார ஏற்றத்தாழ்வுகளுக்கு நியாயம் கற்பிக்கும் முறை அல்லது மனப்போக்கும் முற்றாக வெறுத்து ஒதுக்கப்பெறும். வலிமைக்கும் வலிமையின்மைக்கும் இடையிலுள்ள இடைவெளி, தக்க பயிற்சியின்மூலம் குறைக்கப் பெறும்; காலப்போக்கில் முற்றாக அகற்றப் பெறும். வலிமையின்மை முழுமையான அனுதாபத்திற்குரிய சாதனமாகவோ, வலிமையுடைமை வெறுக்கத் தக்கதாகவோ கருதப் பெறாது.

இச்சமுதாயத்தில் ஒவ்வொரு பகுதியினரின் அறிவுத் திறனும் சமுதாயத்தின் சொத்தாகும். ஆனால், அந்தத் தனித்திறமையை, உயர் மனப்பான்மையுடன் ஒதுக்கவும், சமுதாயத்திலிருந்து சமுதாயத்தின் ஒரு பகுதியினரை ஒதுக்கவும், ஆதிக்கம் செய்யவும், சுரண்டவும் கருவியாகப் பயன்படுத்த உரிமை இருக்காது. சமுதாய மேம்பாட்டுக்கு அவர்களுடைய அறிவும் திறனும் பயன்பட வேண்டும். அதுபோலவே, வலிமையற்றவர்கள் தொடர்ந்து வலிமையின்மையைப் பட்சாதாபமாக்கித் தொடர்ந்து சலுகைகளில் திளைத்துச் சவலையாக வாழவும் அனுமதிக்காது. வலிமையில்லாதவர், திட்டமிட்டுச் சில ஆண்டுகளுக்குள்ளாகவே வலிமை பெறும்படி வளர்க்கப் பெறுவர். பொதுவாக, "ஒருவர் எல்லாருக்காகவும் எல்லாரும் ஒருவருக்காகவும்" என்னும் சமுதாய நியதி ஒழுங்காகவும் ஒழுக்கமாகவும் இடம் பெறும்; நடைமுறைப்படுத்தப் பெறும்.

மனித குலத்தில் தனியுடைமைச் சமுதாய அமைப்புத் தோன்றிய பிறகும் பொருளியற் சார்பு கொண்ட பிறகும் உரிமைகளின் எல்லையைப் பராமரிக்கும் நோக்கத்தில் அரசியல் தோன்றியது. அரசியலும் ஒருவகை விஞ்ஞானமே. மானுடத்தின் சீலம் பொருந்திய நல்வாழ்க்கைக்கு அரசியல் தேவை. திருவள்ளுவரும் பொருட்பாலில் அரசியல் எனும் தலைப்பில் 25 அதிகாரங்கள் எழுதியுள்ளார்.

மானுடத்தின் அனைத்துச் சிறப்புக்கும் அரசியலே அடிப்படை என்கிறார் திருவள்ளுவர். நாட்டு மக்களிடத்தில்