பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

336 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்


சிங்கள வர்களைப் புரிந்து கொண்டு பழக, இவர்கள் சிங்களத்தைப் படித்துக் கொள்ளவுமில்லை. அவர்கள் இவர்களைப் புரிந்துகொள்ள - பழக அவர்கட்குத் தமிழைக் கற்றுக் கொடுக்கவுமில்லை. இந்த நிலைமையில் மொழி அல்லது இனத்தினாலாய ஒற்றுமைகள் வளர்ந்து காலப் போக்கில் பகைமையாக மாறி உறவைக் கெடுத்துவிட்டது. நாம் எந்த நாட்டில் வாழுகிறோமோ, அந்த நாட்டை நம்முடைய நாடாக ஆக்கிக்கொள்ள முயலவேண்டும். அச்சாதனையை நாம் அடைவதற்காக அதற்குரிய வகையில் நமது கல்வியை அமைத்துக்கொள்ள வேண்டும்.

ஆங்கிலேயர்களும், ஆரியர்களும் எந்தெந்த நாடுகட்குச் சென்று வாணிகம் செய்தார்களோ அந்தந்த நாடுகளின் மொழிகளைப் படித்துக்கொள்வதில் அக்கறை காட்டினார்கள். அதுபோலவே, ஆங்காங்குள்ள மக்கட்குத் தங்கள் மொழியைக் கற்றுக் கொடுப்பதிலும் அக்கறை காட்டினார்கள். அதன் காரணமாகவே ஆங்கிலம் உலக மொழியாயிற்று. சமஸ்கிருதம் இந்திய மொழியாயிற்று. தமிழர்கள் தம் முயற்சியைச் செய்யாமையின் காரணமாக - தமிழ் மொழி தமிழ்நாட்டு மொழியாகக்கூடப் பூரணமாக இடம் பெவில்லை. ஆதலால் தமிழர்கள் உலக அரங்கோடு - உலக மனித சமுதாயத்தோடு உறவு கொண்டு புகழ் பெற்று வாழ வேண்டுமானால், பல மொழிகளையும் பயில வேண்டும். பலமொழி வழிப்பட்ட மக்கட்கும் பைந்தமிழைக் கற்றுக் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும். அன்றே உலகம் நம்வழி நடக்கும். இதனை வள்ளுவர்,

"யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையும் கல்லாத வாறு"

(397)

என்று கூறியிருக்கிறார்.