பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/339

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 335


ஆதலால் குற்றத்தை உணர்த்தி நீக்கும் கல்வியும் குற்றம் நீங்கி நின்றொழுகும் ஆற்றலைத் தரும் கல்வியும் வாழ்க்கையை வளப்படுத்தும் என்பது வள்ளுவத்தின் திரண்ட முடிபு.

மொழியும் உறவும்

மிழகத்தின் வரலாறு எவ்வளவுக்கெவ்வளவு பெருமைப்படத் தக்கதாக அமைந்திருக்கிறதோ, அவ்வளவுக் கவ்வளவு வருத்தப்படுதற்குரிய செய்திகளும் உள. தமிழர்கள் கடல்நாடு என்று கருதப் பெறுதற்குரிய இங்கிலாந்தைச் சேர்ந்த ஆங்கிலேயருக்கு முன்னோடியாகவே கடலில் கலம் செலுத்தியவர்கள். கடல் கடந்த நாடுகளோடு வாணிகம் செய்தவர்கள். சிறப்பாக இந்திய கிழக்காசிய நாடுகளைத் தன்னகத்தே கொண்ட பெருந்தமிழ்நாடு உடையவர்கள். இமயத்தின் மடியிலும், கங்கைக் கரையிலும், சிந்துநதியின் ஓரத்திலும் தமிழர்கள் உலாவினர் - வாழ்ந்தனர் என்று வரலாறு பேசுகின்றது. எனினும் இன்றையத் தமிழர்கள் நிலை என்ன? அந்தப் பழைய தமிழகம் எங்கு போயிற்று? தமிழர்கள் தங்களுடைய உறவு கலந்து வாழும் பண்பை வளர்த்துக் கொள்ளாமையின் காரணமாகவே, இவற்றை யெல்லாம் இழந்தனர் - இழந்து கொண்டிருக்கின்றனர் - இனியும் இழப்பர்போல் தோன்றுகிறது.

வேறுபட்ட பல்வேறு மனித இனத்தினரிடையேயும் அன்பைப் பெருக்கி உறவை வளர்ப்பது மொழியினாலாய விழுமிய பயன். மொழியின் இந்த விழுமிய நோக்கத்தைக் காலப்போக்கில் தமிழர்கள் மறந்தார்கள். நாம் வேறொருவரோடு உறவு கொண்டு வாழ விரும்பினால், அவரைப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். புரிந்துகொண்டு பேசிப் பழகி வாழ்வதற்கு நம்மைத் தகுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். இலங்கையில் தமிழர்கள் வாழ்ந்தார்கள். ஆனால்