பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

334 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்


நீங்குகிறவரையில் கற்க வேண்டும். குற்றம் நீங்கியபிறகு பெற்ற புதுநெறியில் நிலைத்து நின்று ஒழுகவேண்டும் என்பதே குறளின் திரண்ட கருத்து. இங்ங்ணமின்றிக் "கசடறக் கற்க" என்பதற்கு ஐயந்திரிபறக் கற்க வேண்டுமென்று பொருள் கூறுவது பொருந்துமாயினும் சிறப்புடையதாகாது.

இந்தப் பார்வையில் வெகுளியுடையவர்கள், பொறையுடைமையை வற்புறுத்தும் நூல்களையும், கோழைமைத் தன்மையுடையவர்கள் ஆள்வினையாற்றலைத் தரும் நூல்களையும், இன்னமும் அவரவர் தம் தம் நிலை நோக்கிக் கற்கவேண்டும். இங்ஙனம் கற்றால் தவறுகள் தொடர்ந்து வாரா. உலகில் தனிமனித வாழ்க்கையிலும், சமுதாயப் பொது வாழ்க்கையிலும் மாறுதல்கள் நிகழும். இத்தகு சிறந்த கல்வியை வழங்கும் கல்விக்கூடம் ஒன்று திறந்தால் ஒன்பது சிறைச்சாலையை மூடலாம் என்பது ஆன்றோர் கருத்து. ஆனால் இன்றோ கல்வியும் பெருகி வளர்கிறது. சட்டப் புத்தகங்களும் மலைபோல் குவிகின்றன. சிறைச்சாலைகளும் மூடப்பட்டபாடில்லை. காரணம் கசடறக் கல்வி இல்லாமையே யாகும்.

பல நூறு ஆயிரம் ஆண்டுகளாகக் கவிஞர்களின் பாட்டுடைப் பொருளும் மாறாமலே இருந்து வருகிறது. எழுத்தாளருக்கும் அதே கதிதான். ஏன்? சொற்பொழிவாளர் பரம்பரையும்கூட ஓராயிரம் ஆண்டுகளாக ஒரே மையத்தைத் தான் சுற்றி வருகிறார்கள். கடவுள் அவதாரங்களில்கூட வடிவ மாறுதல்கள் ஏற்பட்டாலும், நோக்க மாறுதல் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. இந்தச் சமுதாயத்தில் சென்ற நூற்றாண்டில் குற்றமாகத் திகழ்ந்த ஒன்று, குற்றம் என்று கண்டு உணர்த்தப்பெற்ற ஒன்று இன்னமும் நீங்கின பாடில்லை. பலரறிய அதைக் குற்றம் என்று கற்றாலுங்கூடக் குற்றத்தை நீக்குவதில்லை. கற்றபடி நின்று ஒழுகுவதில்லை. இது ஒரு பாணி. அதனால் கவிஞர் உலகக் கருத்துச் சிந்தனையும் வளரவில்லை. நாடும் நாளும் வளரவில்லை.