பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/343

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 339


பேசினால் போதாது. அல்லது தண்டனையைக் காட்டி அரசும், நரகத்தைக் காட்டி மதத் தலைவனும் மிரட்டினால் ஒழுக்கம் வளர்ந்து விடுமா என்ன? போக்குமடை கட்டாமல் அணையில் தண்ணிரைத் தேக்கினால் உடைப்பெடுப்பதைத் தவிர, வேறு வழியென்ன?

அதுபோலவே வாழ்க்கையின் தேவைகளைப் பெற்று சீராக வாழும் வழிவகைகளைக் காட்டாமல் - பெற துணை நிற்காமல் - அல்லலுற்று அழச் செய்தால் ஒழுக்கமா வளரும்? நரகத்தைத்தான் காட்டுங்களேன்?. ஒருக்காலும் முடியாது.

குற்றம் இருக்கிற இடம் மட்டுமே நமக்குத் தெரிகிறது. ஆனால் அந்தக் குற்றத்தின் பிறப்பிடம் நமக்குத் தெரிவதில்லை. தெரிந்தாலும் தெரிந்ததாகக் காட்டிக் கொள்ள மறுக்கிறோம். காரணம் நாமேகூட அந்தக் குற்றங்கள் தோன்றக் காரணமாக இருப்பதனால்தான். பொய் சொல்வது குற்றம். ஆனால் அதைவிடப் பெரிய குற்றமுடையது பொய் சொல்ல உருவாக்கிய சமுதாயமேயாம். திருடுவது பெரிய குற்றம். ஆனால் அதைவிடப் பெரிய குற்றம் திருடக்கூடிய சூழலில் சமுதாயத்தை அமைத்திருக்கிறோம். அழுக்காறு கொள்வது குற்றம். ஆனால் அதைவிடப் பெரிய குற்றம் அழுக்காறு தோன்றுமளவுக்கு ஏகபோகமாக வாழ்வதை அனுமதிப்பது. மேற்கண்ட குற்றங்களின்றி சமுதாயத்தின் நடைமுறையை ஒழுங்குபடுத்தி எல்லோரும் எல்லாவற்றையும் பெற்று வாழும் இயல்புடைய சமுதாயமாக அமைப்பது அரசின் பொறுப்பு. ஆனால் இன்றோ அரசுகள் இந்தப் பொறுப்பினையா மேற்கொண்டு செய்கின்றன? இன்றோ அரசு வல்லாளர்கள் கையிலேயே சிக்கி அவர்கள் கைப்பொம்மையாக இருக்கிறது. அரசு நாட்டு மக்களிடையே குற்றத்தைப் பார்க்குமானால், அந்தக் குற்றம் மக்களிடையே தோன்றி வளர்வதற்கு அரசின் ஆட்சிமுறையின் குறைபாடே