பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்


என்பது ஒரு கலை. அதனால் திருக்குறள் “வையத்துள் வாழ்வாங்கு வாழ்தல்” என்றது. வாழ்வாங்கு வாழ்தலாவது, மண்ணில் வாழும் பொழுது வளமுடன் வாழ்தலும், மரணத்திற்குப் பின்னும் மக்கள் மனத்தில் நிலை நிற்பதற்குரியவாறு புகழ்பட வாழ்தலுமாகும். அதனால் திருக்குறள் “புகழ்பட வாழ்தல்” என்றே கூறுகிறது.

வையத்துள் வாழ்வாங்கு வாழ அறிவு தேவை. துன்பத்திலிருந்து மனிதத்தைக் காப்பது அறிவு என்ற கருவி என்று திருக்குறள் கூறும். “அறிவு அற்றம் காக்கும் கருவி” என்பது திருக்குறள். மேலும் “அறிவுடையார் எல்லாம் உடையார்” என்றும் திருக்குறள் பேசுகிறது. கற்றல், கேட்டல்; கற்றனவற்றையும் கேட்டனவற்றையும் வாழ்க்கையில் நடைமுறைப்படுத்திப் பயன் காணல் - அறிவுடைமை.

இந்த உலக வாழ்வு நுகர்வுகளால் ஆயது. உண்டு, உடுத்து, உறங்கி வாழ்தலுக்குரிய பொருள்களைச் செய்து குவிக்க வேண்டும். “செய்க, பொருளை” என்று திருக்குறள் ஆணையிடுகிறது. அறிவும் பொருளும் இருந்தாலும் கூடி வாழக் குடும்பம் வேண்டும். நல்லதொரு சமூக அமைப்பு வேண்டும் என்பதை உணர்த்த இல்லற இயல் கூறிப் பின் சமூக இயலுக்குரிய பொருளியல் கூறுகின்றார். இடையில் துறவற இயல் அமைந்துள்ளது. துறவு என்பது நுட்பமான ஒரு வாழ்க்கை முறை. எந்த ஒன்றின் பாலும் அளவற்ற ஆசை வைப்பின் அது திதாக முடியும். “அவா வெள்ளம்” என்பார் மாணிக்கவாசகர். பொருளியலில் திருவள்ளுவர் வாழ்க்கையைப் பயனுடையதாக்கும் ஊக்கத்தை“உள்ளம் உடைமை உடைமை” என்றும், “அறிவறிந்த ஆள்வினை” என்றும் கூறுகின்றார். பொருளியலுக்குள் நுழையும் முன் ஊழ் பற்றிப் பேசுகின்றார். அறத்துப்பால் தொடங்கி இல்லறஇயல், துறவற இயல் பேசிப் பின் ஊழியலைத் தனி அதிகாரமாகப் பேசுகின்றார். காரணம், முன் கூறிய இல்லற இயல், துறவற இயல் சார்ந்த வாழ்க்கைகளில் ஏற்பட்ட