பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

88 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்



திருக்குறள் காலச் சமுதாய மக்கள் உழவுத் தொழிலிலேயே பெரிதும் ஈடுபட்டிருந்தனர். மக்களியல் கூறி முடித்த திருவள்ளுவர் அடுத்து அவர் செய்த உழவுத் தொழில் பற்றி விரிவாகவே பேசுகின்றார். “உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்” என்று உழுவோரை உச்சிமீது வைத்துப் பாராட்டுகிறார். திருவள்ளுவர் உழவியல் துறைத் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கினார் என்று புலனாகிறது. தொழிலில் சிறந்தது உழவு. மனிதருள் சிறந்தவர்கள் உழவர்கள். வளம் சேர்ப்பதில் உழவுத் தொழிலே தலையாயது: நன்னெறித் தொடர்புடையது. உழவுத் தொழில் துட்பத்தைத் திருவள்ளுவர் தெளிவாகக் கூறுகிறார். நாள்தோறும் கழனிக்குச் சென்று பயிரைப் பாதுகாக்க வேண்டும் என்ற கடப்பாட்டுணர்வினை,

“செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து
இல்லாளின் ஊடி விடும்”

(1039)

என்று கூறி விளக்குகின்றார். உழவுத் தொழில் கடப்பாடுகளை முறைப்படுத்திக் கூறுவது வியப்பைத் தருகிறது.

“ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்
நீரினும் நன்றதன் காப்பு”

(1038)

என்ற திருக்குறள் கூறும் உழவுத் தொழிலின் நெறிமுறைப் பாடுகள் என்றைக்கும் உரியன என்பதை உணர்க. உழவும் ‘தெள்ளு புழுதி’ என்பார்களே அதுபோல அமைய வேண்டும் என்பார் திருவள்ளுவர். அதனால் அந்தக் காலத்திலேயே இருந்த “கோடை உழவை”த் திருவள்ளுவர் அறிமுகப்படுத்தியுள்ளார். நிலமகள் தன்னொடு தொழில் புரிந்தாருக்கு இல்லை என்று சொல்லுவதில்லை; அள்ளிக் கொடுப்பாள். நிலம் இருந்தும் செயற்படாத சோம்பரைக் கண்டு நிலமகள் நகுவாள் என்பதனை, -