பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

94 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்


ஒன்றல்ல; ஒரு தன்மைத்து அல்ல. உயிர்கள் பலப்பல; பலவகைப்பட்டன. உயிர் உண்டு என்ற கொள்கையும், அவை ஒன்றல்ல, பலப்பல என்பதும் திருக்குறள் கருத்து.

"தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து

மன்னுயிர்க் கெல்லாம் இனிது".
(68)

இந்தக் குறளில் மன்னுயிர்க்கெல்லாம் இனிது என்பதை அறிக.

உயிர் உய்தல் வேண்டும்; அஃது உய்தலுக்குரியது என்பதும் திருக்குறள் கொள்கை உய்தலாவது வளர்தல். வளர்தலாவது துன்பத் தொடக்கிலிருந்து விடுதலை பெறுதல். "உய்வர்” என்ற சொல்லையும் திருவள்ளுவர் ஆள்கின்றார்.

"எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை

வியாது பின்சென் றடும்
(207)

என்பதறிக.

உயிர்க்கு உற்றது என்ன? எத்தகைய உய்தல் உயிரடைதல் வேண்டும்? உயிரியற்கை, செயல்-செயற்பாடுறுதல் என்பது. உயிர் செயற்பாடுறாது போனாலும் துன்பம் வரும். பயன்படுத்தப் பெறாத இரும்பு துருப்பிடித்து அழிவது போல, வினைப்பாடுறுதலில் - செயற்பாடுறுதலில் உயிர் ஈடுபடவில்லையானாலும் உயிர்க்கு நல்வாழ்வு அமையாது துன்புறும். அதுபோலவே, நல்லதன் நன்மையையும் தீயதன் தீமையையும் ஆய்ந்த்றிந்து செயற்பாடுறுதல் வேண்டும். தவறாகச் செயற்பாடுறுதலும் கூடத் துன்பந்தரும். உயிர்க்குரிய பகை, வினைப்பகை யென்பதேயாகும். வினைப் பகையினின்று உயிர் மீளுதலே உய்தல். வினைப் பகையினின்று உயிர் மீள உயிர் அறிவுபெறுதல் வேண்டும்.

உயிருக்கு அறிவு பிறப்பினாலமைவதன்று. உயிர் பிறந்து வளரும் பொழுது கற்றல், கேட்டல் மூலமும் பட்டறிவினாலும் அறிவு பெறுகிறது. அறிவுடையராதல் இயற்கையன்று. அறிவுடையராதல் முயற்சியின் பயன். "கற்றனைத் தூறும் அறிவு” என்றது திருக்குறள். அறிவு