பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

112

தவத்திரு குன்றக்குடி அடிகளார்






ஏப்ரல் 5


மன்னுயிர் அனைத்தையும் தழுவி நிற்கும் வாழ்வினை அருள்க!

இறைவா, எனக்குப் பகுத்தறிவு தந்தருளினை ஆதலால், நான் அஃறிணைப் பொருள்களை விட உயர்ந்தவன் என்று தம்பட்டமடித்துக் கொள்கிறேன். ஆம்! உண்மை.

உயிர்த் தொகுதியனைத்தும் தாங்கி வளர்த்து வாழ்விக்கும் நிலத்திற்கு நான் ஈடு ஆவேனா? நிலம் மக்கள் வாழ்வுக்குப் பயன்படுமாறு போல வேறு எது பயன்படுகிறது? கழிவுப் பொருள்களைத் தன்மடியில் வாங்கிக் கொண்டு, பின் படைப்பாற்றல் மிக்க உரமாகத் தருகிறதே! என்ன அற்புதம்! நிலம், அதனைக் கொத்தினாலும் வெட்டினாலும், உழுதாலும் சினங் கொள்ளாது. மாறாக, நன்மையையே தருகிறது. இறைவா, நானோ கழிவுப் பொருள்களைக் கழிக்கவே முயலுகிறேன். உடன்பாடிலாத மனிதனை ஒதுக்கவே முயலுகிறேன்.

அம்மம்ம! இறைவா, நான் என்னையே சுற்றுகிறேன். நிலம், வானவெளியில் சுற்றுகிறது. எனக்கும் பகுத்தறிவு இருந்து என்ன பயன்? இறைவா. என் வாழ்க்கை பயன்பாடுடையதாக வளர அருள் செய். மன்னுயிர்த் தொகுதி அனைத்தையும் தளுழுவி நிற்கும் வாழ்க்கையை அருள் செய்க!