பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவருட்சிந்தனை

195






ஜூன் 27


நான் என் மீது அதிகாரம் செலுத்தி வாழ்ந்திட அருள் செய்க!

இறைவா, அடியார்க்கு எளியன் என்றெழுதிய எளியோய். அப்பெற்றியனாகிய நீ என்னை எளிமையாய் வந்து ஆட்கொண்டனை. ஆயினும் என் செய்ய? நான் மீண்டும் மீண்டும் விளக்கொளியில் வீழும் வீட்டில் பூச்சியாகிக் கொண்டிருக்கிறேன். இதற்கென்ன காரணம்? என் துன்பத்துக்கு நானேதான் காரணம்.

இறைவா, நான் தனிமுடி கவித்து அரசாள விரும்புகிறேன். அதிகாரப்பசி கோரப்பசியாக இருக்கிறது. ஆனால், நான் அதிகாரம் செய்ய இயலுமா? அதிகாரம் சென்றடையுமா? இறைவா, என் அதிகாரம் சென்றடையாது. ஏன்? என் அதிகாரம் செல்லுபடியாக வேண்டுமானால் நான் ஆற்றல்மிக்குடையோனாக இருக்க வேண்டும். என்சக்தி அபரிமிதமாக இருக்க வேண்டும். எனக்கு ஏது ஆற்றல்? சக்தி?

இறைவா, இந்த நாக்கை அடக்கமுடியவில்லையே! சுவைபார்த்து வயிறு புடைக்கத் தின்கிறது. அதன் பயனாக எடை கூடுகிறது. எடை கூடினால் எளிதில் நடமாட முடியாது. சோம்பல் வந்தணையும். சோம்பலின் இணைகளாகிய - பரிவாரங்களாகிய நோய்கள் ஒன்று பலவாக வந்தடையும். இறைவா, இதுதான் என்னுடைய யதார்த்த நிலை!

நான் என் நாவின் மீது அதிகாரம் செலுத்த முடியவில்லை. வயிற்றின் மீது நாவிற்கு இருக்கும் சர்வாதிகாரத்தைத் தடுக்க முடியவில்லை. நொய்ம்மையானேன்! இறைவா, என் பொறிகள் மீது எனக்கு அதிகாரம் இல்லை. அவை என்னை ஆட்டிப் படைக்கின்றன. இறைவா, என்னைக் காப்பாற்று.

இறைவா, நான் ஆற்றலுடையோனாக வளர, வாழ என்மீது எனக்கு முழு அதிகாரம் இருக்க வேண்டும். என் பொறிகளின்மீது தனியரசாணை செலுத்தவேண்டும். நான் என் ஆன்மாவின் மீதே அதிகாரம் செலுத்தி வாழக் கற்றுத் தா! இறைவா, அருள் செய்க!