பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவருட்சிந்தனை

201




ஜூலை 3


இறைவா, விவாதங்களில் ஈடுபடாது காரியத்திலேயே
கண்ணாக இருப்பேன், அருள் செய்க!

இறைவா, பித்தனே, மோனத் தவமிருக்கும் உத்தமனே. ஏசினும் ஏத்தினும் ஏற்றருள் செய்யும் அருளாள, என் மனம் மெளனத்தை நாட அருள் செய்யக்கூடாதா?

என் செயலடங்கி, அறிவடங்கி, உணர்வடங்கி உன் திருவடிகளில் உற்று அமர்ந்து தூங்காமல் தூங்கிச் சுகம் பெறுவது எந்நாள்? ஆலமர் செல்வா, சொல்லாமல் சொல்லும் இறைவா, நின் காட்சியே எனக்கு ஆசிரியன். நீ வாய் திறந்து சொல்லாதது ஏன்? வாய் திறந்தால் அது நில்லாது தொடரும். விவாதமாகி விடும்.

அறிவாளி பேசக்கூடாது என்ற நின் அருள் மொழியின் பொருள் புரிகிறது. இறைவா, நன்றருளிச் செய்தனை. என் பகைவர் எவ்வழியைத் தேர்ந்தெடுத்தும் எனக்குத் தீமை செய்யலாம். வாழ்த்தியும் தீமை செய்யலாம்.

வாழ்த்துப் பெற்றதன் மூலம் தகுதியடைந்து விட்டோம் என்ற முனைப்பில், முயற்சிகள் முடங்கி வாளா வாழ்தலாகிய தீமை நிகழும். நன்மை செய்தல் போலத் தீமை இழைத்தல் இது. அநியாயமாகக் கிண்டல் செய்வது, வினாக்கள் தொடுப்பது, விடைகள் கூறினால் விவாதமாக்குவது - இவைகள் மூலம் வாழ்கையைப் பாழாக்குதல்! இறைவா நல்ல அறிவுரை.

இனி, நான் பேசுவதில் முன்நிற்க மாட்டேன். கற்பேன், கேட்பேன். கிண்டல், கேலிகள் பற்றி அலட்டிக் கொள்ள மாட்டேன். ஆத்திரப்படவும் மாட்டேன். விதண்டாவாதமான வினாக்களுக்கு விடை சொல்ல மாட்டேன். விவாதங்களில் ஈடுபட மாட்டேன். காரியத்திலேயே கண்ணாக இருப்பேன். இறைவா, இப்படியே வாழ எனக்கு அருள் செய்க!