பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

256

தவத்திரு குன்றக்குடி அடிகளார்





ஆகஸ்டு 27



இறைவா, திரிபுபடாத அன்பை நின் திருவடிகளில் அர்ப்பணிக்க அருள் செய்க!

இறைவா, பேராளா! எம்பெருமானே போற்றி! போற்றி!! நான் நின் சந்நிதிக்கு நாள் தோறும் வருகின்றேன். உன்னை மனமுருகி அழைக்கிறேன். ஆயினும் பலன் ஏதும் கிட்டவில்லை. இறைவா, என் வஞ்சனை ஆறு வற்றிய பிறகல்லவா பக்திப் புனல் பாயும்.

ஆம் இறைவா! நான் ஒரு மனிதனல்லன்! இரு வேறு நிலையினை ஏற்கும் மனிதனாக ஒரே போழ்து விளங்குகின்றேன். ஆம் இறைவா! எதிலும் இரட்டை மனப்பான்மை, நான் எந்த ஒன்றுக்கும் உண்மையாக, நிலைப் பற்றாக விளங்குவதில்லை. அது மட்டுமா? வஞ்சனையையே பாற் சோறு போலக் கருதுபவன். இறைவா, இது மட்டுமா? நான் எதையும் பயன் கருதியே செய்வேன்.

இறைவா, நின் சந்நிதிக்கு வந்து நின்னைத் தொழுவது கூடத் தன்னலப் பற்றோடுதான்! நின் திருவருள் நலம் போற்றிய கண்ணப்பர் போல் நின்னைக் கருதியேயன்று. நின் நலம் கருதியதன்று! இறைவா என்னை மன்னித்தருள் செய்க!

என்னை வஞ்சனையிலிருந்து மீட்டு எடுத்தருள் செய்க! நான் எங்கும் எப்போதும் ஒரு நிலையினையே கடைப்பிடித்து ஒழுகும்படி அருள் செய்க! இறைவா, என் வாழ் நாள் முழுவதும் மற்ற உயிரினத்துக்குரிய நன்மைகளை நாடிச் செய்திடும் நல்வாழ்க்கையை அருள் செய்க!

இறைவா, நீ எனக்கு நன்றருளுதல் வேண்டும். நீ நன்றே செய்தாலும் சரி பிழையே செய்தாலும் சரி! நான் இனி உன்னிடத்தில் வேறு குறிக்கோள் இல்லாத தூய அன்பையே காட்டுவேன்.

இறைவா, திரிபு படாத அன்பை நின் திருவடிகளில் அர்ப்பணிக்க அருள் செய்க! நின் அடியார் குறிப்பையே கடமையாகக் கொண்டு வாழ்ந்திட அருள் செய்க! இறைவா, அருள் செய்க!