பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/345

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவருட்சிந்தனை

333






நவம்பர் 12


உணவைத் தேடி அலையும் நான் உணர்வினைத் தேட அருள் செய்க!



இறைவா, தொழுது எழும் மக்கள் வினையை நீறாக்கும் வண்ணம் நீறணியும் அம்பலத்தரசே! திருநீறு உன்சின்னம்! உன்னை நினைவூட்டும் அடையாளம். உன்னை நினைக்கத் துரண்டும் துரண்டுகோல்.

இறைவா, திருநீறு தோற்றுவிக்கும் மங்கல விளைவு களுக்காக, திருநீறு அணிந்தாரையே போற்றினர். பாராட்டினர். இறைவா, நாள்தோறும் தூயவெண்ணிறு அணிந்து உன்னை - உன் திருநாமத்தை நினைந்திடும் இனிய பேற்றினை அருள் செய்க!

பூசுந் திருநீற்றினைப் போலவே என் உள்ளமும் தூய்மையாக இருந்திட அருள் செய்க! மனத்தது மாசாக வாழ்தல் நன்றன்று. உடல் தூய்மை எளிதில் அமைந்து விடுகிறது.

ஆனால், மனத்துய்மைக்குரிய வாய்மை, வாழ்க்கையில் எளிதில் வந்து அமைவதில்லை.

வாய்மையை நல்கும் அன்பு, என் நெஞ்சத்தில் வந்து பொருந்துவதில்லை. நான் உடல் வசப்படுகின்றேன். உடல் தன்னலமே நாடுகிறது. அதற்குரிய துணையாகிய உயிர்க்கு ஊதியம் தேட அனுமதிப்பதில்லை.

உணவைத் தேடியலையும் நான், உணர்வினைத் தேட அருள் செய்க! வாய்மையில் வழாது நிற்க அருள் செய்க! மன்றுளானே! மனத்துய்மையை அருள் செய்க! மனத் துய்மை காத்து வாழ்ந்திட வழிகாட்டி அருள் செய்க!