பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/364

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

352

தவத்திரு குன்றக்குடி அடிகளார்





டிசம்பர் 1


என் அறியாமையை நானறிந்து அறிவை நாடிடும் ஆர்வத்தினை அருள்க!

இறைவா, பையவே கொடுபோந்து பாசமெனும் தாழ் உருவும் உத்தமனே! நாவிற்குச் சுவையான உணவு! உடலுக்கு நலமான உணவு! இவையிரண்டில் நாவிற்குச் சுவையான உணவு தயாரித்தலில் வேலை மிகுதி. பொருள்கள் நிறையத் தேவை! எனினும் உணவு, என் நாவிற்குச் சுவையாக அமைந்தாலும் உடலிற்கு நலமளிக்குமா என்பது ஐயப்பாடே!

இறைவா, இந்த உலகில் உயிர்க்கு மகிழ்வைத்தரும் சூழல்களை எல்லாம் நீ கருணையோடு அளித்துள்ளாய். பொன் உண்டு. மணி உண்டு. பொருள் உண்டு. துய்ப்பனவும் உண்டு. உய்ப்பனவும் உண்டு. யாதுமோர் குறைவில்லை. ஆயினும் ஏன் நான் கள் குடித்த குரங்குபோல் ஆனேன்? இல்லை, இல்லை! கள் குடித்த குரங்கை - தேள் கொட்டியது போல் ஆனேன். இவற்றையெல்லாம் முறையாகத் துய்க்கத் தெரியாமல் மன விகாரப்படுகிறேன். ஆசைப்படுகிறேன். இறைவா, என்னைக் காப்பாற்று.

என் பிழையைப் பொறுத்தருள். இனிமேலும் பிழைகள் வராமல் பாதுகாத்தருள் செய்க! என்னுடைய பொறிகளைச் சுவை நோக்கி அலையாமல் பயன் நோக்கி அடைந்து துய்க்கச் செய்யும் துணிவைத் தந்தருள் செய்க!

என் புலன்களின் மீது எனக்கு மேலதிகாரம் இருக்கும் படி, அருள் செய்க! என் புலன்களைத் தூய்மையாகப் பேணத் துணை செய்க! என் அறியாமையை நானறிந்து கொண்டு அறிவை நாடிடும் ஆர்வத்தினை அருள் செய்க!

வேண்டுதல் வேண்டாமை இல்லாத தூயவாழ்வினை அருள் செய்க! வேண்டாமை என்ற விழுப்பம் மிக்க செல்வம் பெறத் துணை செய்க! வாழ்க்கையில் ஒளி நிறையட்டும்! அறிவை நாடும் ஆர்வத்தினை அருள் செய்க!