பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

176

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


சமுதாயத்தைச் சமயம் படைக்கும் என்ற தெளிவைத் தரவேண்டும். அருள்நந்தி சிவம், மார்க்சீயத்தில் முற்கால வடிவமாகிய உலகாயதத்தைத் திறனாய்வு செய்து மறுத்துள்ளார். ஆயினும், அது உலகாயத்தின் மறுப்புரையாக மட்டும் விளங்குகிறதே தவிர நடைமுறைக் குறைகள் நீக்கத்திற்குரிய விளக்கம்தரப் பெரிதும் முயலவில்லை.

இந்நிலையில் தமிழகத்தின் பழைய நாகரிகத்தின் தலைநகரமாகிய மதுரையில் நிலைபெற்றுள்ள ‘மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் திருக்குறள் நெறியில்-சிவ நெறியில் நாட்டுப்பணியில் ஈடுபட்டு, தம்மை அர்ப்பணித்துக் கொண்ட வ.உ.சி. புகழ் பரப்பும் ‘தமிழவேள்’ ஏ.பி.சி, வீரபாகு அமைத்த அறக்கட்டளையின் சார்பில் சித்தாந்தச் செந்நெறியைப் பற்றிப் பேசுகின்றோம். நம்முடைய பேச்சு சமய நெறியளார்களுக் கிடையில் சிந்தனையைத் தோற்றுவிக்குமானால், அறிவாராய்ச்சியைத் தொடங்கி வைக்குமானால் அதுவே நாம் விரும்பும் பயன். நம்முடைய பேச்சைகருத்தை மறுப்பின்றி ஏற்க வேண்டும் என்பது நமது நோக்கமன்று! விருப்பமுமன்று; ஆராய்ச்சி செய்யுங்கள். அதுவே போதும்-சார்பின்றி-பற்று-பாசமின்றி-அறிந்து உண்மையை நாடிக்காணவேண்டும் என்று விரும்பி ஆராயும் உலகம் - உண்மையைக் காணுதல் இயற்கை என்ற நம்பிக்கை நமக்கு மிகுதியும் உண்டு.

சித்தாந்தச் செந்நெறிக் கருத்துக்கள் முழுமையான நூல் வடிவம் பெற்றது மெய்கண்டார் காலத்தில் ஆனாலும், சித்தாந்தச் செந்நெறியின் கருத்துக்கள் தொன்மையானவை; பழைமையானவை. சித்தாந்தச் செந்நெறி, அறிவாராய்ச்சி அடிப்படையில் தோன்றி உள்ளார்ந்த அருளனுபவம் வழி செழித்து வளர்ந்த-நெறி. சித்தாந்தச் செந்நெறியின் முதலாசிரியன், “ஆலமலர் செல்வனே” யாம். “சித்தாந்தம்” என்ற சொல்லுக்கே “முடிந்த முடிபு” என்று பொருள். இனிமேல் கேள்விகள் கேட்க முடியாவண்ணம் சிந்தனையின்