பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சைவ சித்தாந்தமும் சமுதாய மேம்பாடும்

205


பாடும் தெரியாது. ஆனால் தன்மை வேறுபாடு உண்டு. இதனை,

பாலை, நெய்தல் பாடியதும் பாம்பொழியப் பாடியதும்,
காலனையன் றேவிக் கராங்கொண்ட-பாலன்
மரணம் தவிர்த்ததுவும் மற்றவர்க்கு நந்தம்
கரணம்பேர்ல் அல்லாமை காண்,
(திருக்களிற்றுப்படியார் - 12)

என்ற திருப்பாடலால் அறியலாம். ஆதலால் சமயம் சார்ந்த வாழ்க்கை முறையில் கற்றலும் கேட்டலும் முதற் கடமை.

உயிர்க் குலத்தை, ஊற்றாகி நின்று வளர்க்கும் ஆற்றலுடையது அன்பு; உயிர்க் குலத்தையும், விண்ணையும் மண்ணையும், இறைவனையும், உயிர்த் தொகுதியையும் இணைப்பது அன்பேயாம். அன்பு, ஆற்றல் மிக்கது; தூய்மையானது; தற்சார்பற்றது; தன்னலம் துறப்பது; பிறர்நலம் கருதுவது; பேணுவது. பிறர் நலம் கருதி- துன்பங் களையும், துயர்களையும் தாங்கிக் கொள்வது; தியாகங்களைச் செய்யத் தூண்டுவது. இந்த அன்பைத் துய்த்துத் துய்த்து மகிழ்வதன் மூலம் உயிர்க்குலம் தழைத்து வளர்கிறது. அதனாலன்றோ திருமந்திரம் “அன்பே சிவம்” என்று கூறியது. சிவமாகிய பரம்பொருளுக்கு உயிர்க் குலத்தின் அன்புதான் பொருள். இதனைத் திருநாவுக்கரசர்,

அன்பலால் பொருளுமில்லை ஐயன் ஐயாறனார்க்கே
(அடங்கன்முறை நாலாம் திரு - 4557)

என்று கூறியுள்ளார். “அன்பே அன்பே என்று அரற்றுவதில் அறிவழியும்”. அத்தகைய அன்பிலே திளைத்து நின்று வாழ்தலே சிறந்த சமய வாழ்க்கை. பத்திமை நிறைந்த வாழ்க்கை. அன்பினில் கரைந்துருகும் பத்தியால் உயிர்க் குலம் தழைத்து வளரும். அன்பின்றிச் செய்யும் சடங்குகள்