பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சைவ சித்தாந்தமும் சமுதாய மேம்பாடும்

225


சுமார்த்தருடைய கலப்பு ஏற்பட்ட பிறகு சமஸ்கிருதத்தில் சில புகழ்மொழிச் சொற்றொடர்களைத் தொகுத்துத் தூய்மையுடையதாகக் காட்டி அர்ச்சனைக்குப் பயன்படுத்தத் தொடங்கி விட்டனர். அவைகளால் அர்ச்சனை செய்யத் தொடங்கிய பிறகுதான், கடவுளை இழிவுபடுத்துதற்குரிய சில செய்திகள் பகுத்தறிவாளர்களுக்குக் கிடைத்தன.

சித்தாந்தச் செந்நெறிக்கும், கோயில்களுக்கும் புறச் சமயங்களால் தாக்குதல் வந்த பொழுதெல்லாம் திருமுறைத் தமிழ்தான் காப்பாற்றியது. 'அஷ்டோத்திரமும்’, ‘சகஸ்ர நாமமும்' யாதும் செய்யவில்லை. ஆதலால், நமது சித்தாந்தச் செந்நெறியைக் காப்பாற்றித் தந்த திருமுறைப் பதிகங்களை ஓதி, மலர் சொரிந்து வழிபடும் வழக்கத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். அன்றுதான் திருக்கோயில்களில் பெருமான் பெருவிருப்புடன் எழுந்தருளி அருள் புரிவான். ஏன்? அவன் தமிழோடிசை கேட்கும் இச்சை கொண்டவன்.

இறைவன் தமிழிசைக்காக நாயன்மார்களுக்குப் பொற்காசுகள் தந்தவன்; பண் சுமந்த பாடல் கேட்க, கூலி கொண்டு மண் சுமந்து அடிபட்டுப் புண்மேனி சுமந்தவன். திருக்கோயில் வழிபாட்டுக்கு உரிமையுடையது திருமறைத் தமிழே. அதைச் சிவநெறியாளர்கள் உரிமையுடன் போற்றி ஒழுகுதல் வேண்டும்.

பழந்தமிழகத்தின் திருக்கோயில்கள் உடலையும் உயிரையும் ஒருங்கே வளர்க்கும் நிறுவனங்களாக விளங்கின. இம்மைக்கும் மறுமைக்கும் ஆக்கமளிப்பவையாக விளங்கின. காலப்போக்கில் அயல்வழக்கின் நுழைவின் காரணமாகவும் தற்சார்பு மிகுந்ததன் காரணமாகவும், அயர்ச்சியின் காரணமாகவும் இன்றையத் திருக்கோயில்கள் முழுமையான திருக்கோயில்களாக விளங்கவில்லை.

இன்று, எதையும் எங்கு நோக்கினும் அரசே பொறுப் பேற்று நடத்துகிறது. சமுதாயப் பொறுப்புணர்வு என்பது