பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

262

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


எப்பெயரால் தொழுதாலும் இவைனைச் சென்றடையாதா? என்று சிலர் வினா எழுப்பக் கூடும்! இவர்கள் “யாதொரு தெய்வம் கொண்டீர் அத்தெய்வமாகி யாங்கே மாதொரு பாகனார்தாம் வருவர்” என்ற சிவஞான சித்தியார் திருவாக்கைச் சான்றாகக் காட்டவும் கூடும். நாம் இந்தத் திருவாக்கின் உட்கருத்தை மறுக்கவில்லை. ஏன், மாணிக்க வாசகர் இன்னும் ஒரு படி மேலே சென்று பரந்தபொருளில் அருளிச் செய்துள்ளார். “தென்னாடுடைய சிவனே போற்றி; எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி” என்பர் அடிகள். நாம் சிவம் என்று வணங்கும் பரம் பொருளைத்தான் உலகத்தவர் வேறு வேறு பெயர்களில் வணங்குகின்றனர். அவன் உலகிற்கு இறைவன் என்றருளிய பொதுமை நினைந்து நினைந்து இன்புறத்தக்கது. சிவம் என்ற தனித்தன்மை, இறைவன் என்ற பொதுத்தன்மையில் வரவேற்கத்தக்கது. இத் தத்துவம் வையகத்திற்கு இன்பம் தரும். ஆதலால் எந்தப் பெயரால் இறைவனை வழிபட்டாலும் அஃது ஏற்புடையதே! நாம் அந்தக் கருத்தில் மாறுபாடு கொள்ளவில்லை. ஆனாலும் உயிர், குறிக்கொண்டு பன்னாள் அருச்சித்துப் பழக, வழிபாட்டைப் பழக்க வழக்கத்தில் உறுதிப்படுத்திக்கொள்ள ஓருருவும் ஒருநாமமும் தேவை. இந்நெறியில் உயிர்கள் நின்றால்தான் இறைவன் திருத்தாள்களைச் சிக்கெனப் பிடிக்க முடியும் தவத்திற்சிறக்க முடியும்; ஞானம் அடைய முடியும். நிலத்தின் பரப்பு அதிகமாக இருக்கலாம். நம் நிலைக்கேற்றவாறு எல்லை கட்டிக்கொள்ள வில்லையா? ஆற்றின் நீளம் கூடுதலாக இருக்கலாம். நம் தகுதிக்கேற்றவாறு துறையை அமைத்துக் கொள்ளவில்லையா? அதுபோல் இறைவன் ஓருருவம், ஒருநாமம் இல்லா ஆயிரம் நாமம் கொண்டவன்தான். ஆயினும் நாம் உய்திபெற ஒருகடவுள் வழிபாட்டில் உறுதியாக நிற்க வேண்டும்.