பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

276

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


என்ற புறநானூற்றுப் பாடல் வரிகள் எழுந்தன. இப்பாட்டினால் அரசே முக்கியம்-சமயம் முக்கியம் அல்ல என்று முடிவுசெய்ய முடியாது.

தட்டிக் கேட்க முடியுமா?

அரசு வளையும்போதும் அரசியல்வாதி ஒருவன் தட்டிக் கேட்கமாட்டான். கேட்டால் பட்டம்-பதவி-சிறப்புஉயர்வு கிடைக்காது.

அரசியல் சற்று வளையும்போது தட்டிக் கேட்கும் தன்மை-நெஞ்சுரம் அருளியல் ஒன்றினுக்கே உண்டு. இதற்குச் சான்று அப்பரடிகள் வரலாறு.

கொடிகட்டி ஆண்ட பல்லவ மன்னனையே எதிர்த்து நின்றார்; மன்னனை அண்டிவாழ்ந்தால் தானம் நிலம் மானியம் கிடைக்கும் எனக் கருதி வாழும் பிற்பட்ட சமயவாதியாக அவர் இல்லை.

பழுதிலாத் துறவுடன் வீடும் வேண்டா விறலின் விளங்கினார் அவர். தாமார்க்கும் குடியல்லாச் சங்கரனுக்கே ஆட்பட்ட அப்பரடிகளிடம் அரசியலைத் தட்டிக் கேட்கும் மாசிலாத் துறவு இருந்தது. தொண்டுள்ளம் இருந்தது. வளமிக்க அருளியல் அனுபவம் இருந்தது. எனவே ‘நாமார்க்கும் குடியல்லோம்’ என்று வாழ முடிந்தது.

கணக்கு மூளை

சமயக்கணக்கர் மதிவழிச் செல்லாச் சான்றோன் என்று திருவள்ளுவரைச் சிலர் குறிப்பிடுவார்கள். உண்மைதான்! வள்ளுவர் சமயக் கணக்கர் மதிவழிச் செல்லாதவர்தான். எனினும் உண்மைச் சமயநெறியில் வாழ்ந்தவர்.

சமயக்கணக்கர் என்றுதானே கூறப்பட்டிருக்கிறது. கணக்குமூளை-கணக்கரிடம் ஈவு இரக்கம் இருக்காது - அனுபவம் இருக்காது-இருந்தால்- பணம் சேர்க்க முடியாது.