பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

286

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


யுள்ளான். அதில் “கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களிடையே கலந்திருந்து அவர்களுடைய வாழ்வில் காணும் குறைகளையும் நிறைகளையும் தனித்தனியே குறித்து வைத்துக் கொண்டேன்; கடவுள் நம்பிக்கையுடன் கோயிலுக்குச் சென்று வழிபடுவோரின் வாழ்வில் கலந்து அவர்களுடைய வாழ்வில் காணும் குறைகளையும் நிறைகளையும் தனித் தனியே குறித்து வைத்துக்கொண்டேன். ஒத்துப் பார்த்ததில் கடவுள் நம்பிக்கை உடையவர்கள் தவறு செய்யப் பயப்படுகிறார்கள்” என்று கூறுகின்றான். சமயத்துடன் தொடர்பு கொண்டவன் தவறு செய்யப்பயப்படுகிறான். மறுமையின் அச்சம்-மறுபிறப்பின் துன்பம் காரணமாகத் தவறு செய்ய அஞ்சுகிறான். ஒரு நீண்ட சாலையில் செல்பவனுக்கு இங்கே பாலம் இருக்கிறது-இங்கே திருப்பம் இருக்கிறது-இங்கே பாதை வளைந்து செல்கிறது என்று அறிவித்து வழி நடத்தும் அறிவிப்புப் பலகைபோல-மனித வாழ்வில் அழுக்காறுஅவா வெகுளி முதலிய குற்றங்களைக் காட்டி - அவற்றிலிருந்து விலகி நல்வழியில் செல்ல ஆற்றுப்படுத்துவதே சமய நெறி.

வாழ்வா? தாழ்வா?

கோயிலில் வேலை செய்பவருக்குச் சோறு கிடைக்கிறது. எனவே அங்கு பொதுநலம் பேணப்படுகிறது என்று சமயச்சார்பினர் கூறுகின்றனர். இன்றைய உலகம் விழித்துக் கொண்டது. இனிமேலும் போலிச் சமயக் கொள்கைகளைக் காட்டி உலகை ஏமாற்ற முடியாது. மனிதனை மனிதனாக பெருமையோடு-பேராண்மையோடு வாழ்வதற்குக் கற்றுத் தரும் உண்மைச் சமயமே எதிர்காலத்தில் நிலைத்து நிற்க முடியும்! கோயிலில் சோறு வழங்குவது பொதுப் பணியாகும் என்று கூறி ஏமாற்ற முடியாது. பெருமையோடு வாழப்பிறந்த மனிதனைப் பிச்சைக்காரனாக்கிவிட்ட கொடுமையை மறைக்க முடியாது. 1952-ல் பிச்சைக்காரனாக இருந்தவன்