பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கொடியா? கொம்பா?

285


என்னுடைய பண்பாட்டைப் பெற்றாயா? என்னுடைய பண்பாட்டிற்கு உரியவன் ஆனாயா? என்று கேட்கிறது. அந்தக் காளைதான்-அறத்தின் வடிவம்தான் திருக் கோயிலின் முகப்பில் படுத்துக்கிடக்கிறது.

அறமும் ஒழுக்கமும் காலத்துக்குக் காலம் மாறுபடும். சமுதாயம் வளரவளர வேறுபடும். ஆனால் ஒற்றுமை மட்டும் மாறுபடுவதில்லை. அதுதான் பிறருக்குத் தீமை செய்யாமல் வாழ்வது என்பது. இந்த அடிப்படைத் தத்துவத்தைப் புரிந்துகொண்டால் அறமே சமயம்-சமயமே அறம் என்ற கருத்து விளங்கும். இரண்டும் வெவ்வேறல்ல என்று கொள்ளலாம். திருக்குறளும் ‘அறவாழி அந்தணன்’ என்று வாழ்த்துகிறது.

மிக்க கொளல்

ஆத்திகர்கள் எல்லாம் யோக்கியர்கள் அல்ல என்று கூறினார்கள். அப்படியானால் அரசியலில் இருப்பவர்கள் எல்லோரும் யோக்கியர்களா? ‘அரசியல் அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம்’ என்று ஒரு ஆங்கிலப் பழமொழி உண்டு. ஆகவே குறைபாடு எங்கும் உண்டு-எத்துறையிலும் உண்டுயார் மாட்டும் உண்டு. அதனாலன்றோ தமிழ்மறை,

குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்-

என்று வரையறுத்துக் கூறுகிறது.

“அரசியலில் உள்ளவர்களைக் காட்டிலும் சமயத்தில் உள்ளவர்கள் கொஞ்சம் யோக்கியராக இல்லாது போனா லும்கூட, யோக்கியர்களாக இருக்க ஆசைப்படுகிறார்கள்” என்ற உரை சிந்திக்கத்தக்கது.

Hendry the Clink என்ற அறிஞன் ‘சமயத்துக்குத் திரும்புதல்’ The Return To Religion என்று ஒரு நூல் எழுதி