பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

330

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


முகவரி என்பது இன்னின்ன இடம்; இன்னின்ன ஊர் என்பது. இந்த ஆள் மனிதராக இருக்கிறாரா? மிருகமாக இருக்கிறாரா? கழுதையாக இருக்கிறாரா? நாயாக இருக்கிறாரா என்பது தெரியாது. அவருக்கு என்ன குணம் இருக்கிறது என்பது தெரியாது. இராமலிங்க அடிகள் திருவொற்றியூரிலே திண்ணையிலே உட்கார்ந்து கொண்டிருக்கிறார். பலர் போகிறார்கள்; வந்து கொண்டிருக்கிறார்கள். இது கிரேக்க நாட்டினுடைய சிந்தனையோடு ஒத்து வருகின்ற நம்முடைய நாட்டு இராமலிங்க அடிகளினுடைய சிந்தனை, போகிறவர்களில் நிறையப் பேரை அதோ பார் மாடு போகிறது; மிருகம் போகிறது; அது இது என்று சொன்னார்.

இதோ ஒரு மனிதனும் போகிறான் என்று சொன்னார். இந்த மனிதனும் போகிறான் என்றால், உருவத்தால் ஒத்திருப்பவர்கள் எல்லாம் மனிதர்கள் அல்லர். நிரம்பப் பேருக்கு மூக்கு விழி எல்லாம் ஒற்றுமையாக இருக்கும். நம் பாட்டிக்குக் கூடக் குழந்தை பிறந்தவுடன் மிகவும் மகிழ்ச்சி, ‘மூக்கும் முழியும் நன்றாக இருக்கிறது’ என்று சொல்வார்கள். இந்த மூக்கும் விழியும் நிறையப் பேருக்கு நன்றாக இருக்கும். ‘உறுப் பொத்தல்’ என்று சொல்வார்கள். ஆனால் உணர்வுகள் எப்படி இருக்கின்றன. அவர்கள் மற்றவர்கள் வாழ்வதிலே என்ன அக்கறை காட்டுகிறார்கள். ‘நான் யார்?’ என்று சொல்லுகின்ற பொழுது, என்னுடைய குணம் என்ன? என்னுடைய நிறை என்ன? தகுதி என்ன? என்பதுதான் அங்கே பொருள். என்னுடைய உள்ளம் எதை விரும்புகிறது? என்னுடைய ஞானம் எது? என்னுடைய அறிவு எது? இந்த அறிவு என்பது இருக்கிறதே மிகவம் தூய்மையான அறிவு, அறிவா? அன்பா? என்று பட்டிமன்றம் போட்டால் நிரம்பப் பேர் அன்புக்குத் தீர்ப்புச் சொல்வார்கள். ஆனால், என்னைக் கேட்டால் அன்பைவிட, அறிவுதான் உயர்ந்தது என்பேன். அறிவில்லாத அன்பு நிலைத்து நிற்காது.