பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


யில் புறச் சமய நெருக்கடிகளிலிருந்து நமது சமுதாயத்தைக் காப்பாற்ற நினைத்தபோது, இந்த அறுவகைச் சமயங்களையும் இணைத்து ஒரு சமயமாக்கினர். அதனால்தான் நம் சமயத்தில் பல மூர்த்திகளை வழிபடும் நிலை உருவாயிற்று. அதனால் சிலர், பல கடவுள்கள் நம் சமயத்தில் இருப்பதைக் குறைவாக நினைக்கின்றனர். அது தவறு. கடவுள் ஒருவர்தான்; அவரைக் கண்டவர்கள் பல வகையினர். அதனால் அவரவர்தம் அனுபவத்தின் வழி பெயர்கள் மாறுபட்டன; அவர்களுக்குள் ஒற்றுமை ஏற்பட்டவழி அனைத்து மூர்த்திகளும் ஏற்றுக்கொள்ளப்பெற்றன. ஆனாலும் வழிபடுவோர் ஒரு கடவுளை வழிபட வேண்டு மென்பதுதான் நெறி. நமது தொன்மைக் காலச் சமயநெறி, சிவநெறியே! இந்தியத் துணைக் கண்டம் முழுவதும், மற்றும் தென்கிழக்காசிய நாடுகள் முழுவதும் பரவி வளர்ந்த நெறி சிவநெறி.

இந்து என்னும் பெயர்

நமது சமயம் சில நூற்றாண்டுகளுக்கு முன் இந்து சமயம் என்று பெயர் பெற்றது. இந்து சமயம் என்ற பெயரமைப்பு இன்று விவாதத்திற்குள்ளாகியிருக்கிறது. இந்து சமயம் என்றால் அஃதொரு பச்சைப் பார்ப்பனீயம் என்ற கருத்து வளர்ந்திருக்கிறது. அதிலும் உண்மையில்லாமற் போகவில்லை. ஆனால், களர் என்பதற்காகக் கழனியை விடுவார் யார்? களர் நீக்கப்படுதல் வேண்டும் என்பதே உண்மை. அதுபோல மனித குலத்துக்கு வேண்டாதனவற்றை விலக்கி, நாம் இந்து சமயம் என்ற பெயரை அதன் பொதுத் தன்மையை ஏற்றுக்கொள்வதில் தவறில்லை. ஏன்? இமயத்தின் முடியிலிருந்து குமரிமுனை வரை நமது மக்கள் வழிபடும் கடவுளின் பெயர்கள் மாறுபடவில்லை; வடிவங்கள் மாறுபடவில்லை, சமயச் சின்னங்கள் மாறுபடவில்லை. இந்த அளவு பரந்து வளர்ந்துள்ள ஒருமைப்பாட்டை இழத்தல் கூடாது.