பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நமது நிலையில் சமயம் சமுதாயம்

95


எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு[1]

என்ற குறளுக்கேற்ப யார்க்கும் அடிமைப்படாது மெய்ப்பொருள் காணத் தலைப்படல் வேண்டும். அங்ஙனம் அடிமைப்பட்டால், சிந்தனை செக்குமாடு போலத்தான் சுற்றும். அதற்குப் பகுத்தறிவு முறையாகத் தொழிற்படின் பழமையினின்றும் விலகாது. ஆனால், அங்கேயே கழித்துக் கொண்டு வட்டமிட்டுத் தேங்காது; விரிவடையும், வளரும்; பழமை மறையும்; புதுமை தோன்றும் விதை மறைந்து செடி தோன்றுவதில்லையா? அதுபோல! ஆதலால் பகுத்தறிவினால் பழமை அழியும் என்று அச்சம் கொள்ளுதல் தவறு. பகுத்தறிவினால் மனித உலகம் முதுமையடையாமல் உயிர்ப்புள்ள இளமையோடு வளரும்; வாழும், பகுத்தறிவு வளர வளர நியாயங்கள் தோன்றும்; அவ்வழி நெறிகள் தோன்றும்; மனம் தொழிற்படும். மனமுடையவன்தானே மனிதன். மனமுடைய மனிதன் மானிட உலகத்திற்கு வான்மழையை ஒத்தவன். அந்த மானிடச் சாதியை வளர்க்கும் உத்தம மனிதன் வளர்க! வாழ்க!

சிந்தனையாளர்கள் இயக்கம்

இந்த மனித குலம் தோன்றிக் கோடானுகோடி ஆண்டுகளாகிவிட்டன. வரலாற்றில் சென்று போன கோடிக் கணக்கான ஆண்டுகளில் மனித உலகத்தின் வரலாறு சிந்தனைக்குரியது. பல நூறு ஆயிரம் பக்கங்களில் விரிந்துள்ள இந்த வரலாற்றில் பல பக்கங்கள் கொடியோர்களின் செய்திகளைக் கூறும்; ஓரிரண்டு பக்கங்கள் உலகத்தை வாழ்விக்கத் தோன்றிய உத்தமர்களின் வரலாற்றினைக் கூறும். ஆனாலும் அந்த உத்தமர்கள் தொடங்கிவைத்த இயக்கமே பின்னால் மனிதரை வாழ்விக்கத் தவறுவதையும் காண்கின்றோம். மனித குலத்தின் வரலாறு நெடிய நேர்க்கோடாக வளரவில்லை.

  1. திருக்குறள், 423.