பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆலயங்கள் சமுதாய மையங்கள்

25


விட்டது; படைப்புக் களங்கள் தோன்றிவிட்டன; நாடு விட்டு நாடு சந்தைக்குச் செல்லும் இயல்புகள் வளர்ந்து விட்டன. இந்தச் சமுதாய அமைப்பில் சுரண்டல்முறை வலிமை பெற்றது. அதனால், மார்க்சு இத்துறையில் நிறைய ஆய்வு செய்ய வேண்டியிருந்தது. சைவ சித்தாந்த ஆசிரியன்மார்களுக்கு அத்தகைய நெருக்கடி இல்லை.

ஊழ் என்பது என்ன?

சித்தாந்தச் சமயம் வினைகளில் வழியது உயிர்களின் வாழ்க்கை - ஆக்கம் என்று கூறுகிறது. இது தொடர்பாக நம்முடைய ஆய்விற்குரிய சொற்கள் மூன்று. அவை, முறையே வினை, விதி, ஊழ் என்று அமையும். “வினை” என்பது உயிர்கள் மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்ற அகநிலை அறிகருவிகளாலும், மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற புறநிலைச் செயற்கருவிகளாலும் செய்யப்பெறும் செயல்களைக் குறிக்கும். அகநிலையிலும் புறநிலையிலும் உயிர், செயற்பாடின்றியிருத்தல் இயலாத ஒன்று. ஒரோவழி புற நிலையில் “சும்மா இருத்தல்” இயலுமாயினும் அகநிலையில் “சும்மா இருத்தல்” இயலாது.

“செம்மான் மகளைத் திருடும் திருடன்
பெம்மான் முருகன் பிறவான் இறவான்
சும்மா இரு சொல் லற என்றலுமே
அம்மா பொருள் ஒன்றும் அறிந் திவனே”24

என்பது அறிக.

இங்ஙனம் இயற்றப்பெறும் செயல்களுக்குரிய பயன்களைச் செய்தோரின் துய்ப்பிற்கு வந்தடைவதற்குரிய நியதியை (Natural Law) “விதி” என்பர். செய்த வினைகளின் பயன்கள், விதிவழியில் செய்தோரின் அனுபவத்திற்கு வந்து சேரும்போது “ஊழ்” என்று பெயர் பெறுகிறது. செய்யும் வினைகளின் பயன்களுள் இம்மையிலேயே துய்ப்பனவும்