பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

120

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


உண்டு; மறுமையில் தொடர்வனவும் உண்டு. உயிர்ச் சார்பான நுண்ணுடம்போடு தொடர்புபட்ட கல்வி, அறிவு, உணர்வு ஆகியனதாம் உயிரைத் தொடர்ந்து பல பிறப்புகளுக்குச் செல்லும் தன்மையுடையன. உடல் துய்ப்பிற்குரிய உலகியற் செல்வங்கள் உடம்போடு மட்டுமே தொடர்புடையன. அதனாலேயே “உடைமை” என்ற சொல் தமிழில் பிறந்தது. ஒருவர் இறந்துவிடின் உலகியற் சார்புடைய செல்வங்கள் மற்றவர் கட்புலனுக்கும் துய்ப்பிற்கும் உரியனவாகி விடப்பெற்றுவிடுவதை ஓர்க, உடம்பிலிருக்கும் உயிர் நீங்கியவுடனேயே அவ்வுடமைகளுடன் இருக்கும் தொடர்பும் அறவே நீங்குவது அனைவரும் அறிந்த உண்மை. ஆனால், உயிரோடு தொடர்புடைய அறிவு முதலியவற்றை, உடம்பும் உயிரும் இணைந்திருந்த காலத்திலும், அப்பொழுது செய்யப்பெற்ற செயல்களின் நிலைப்பாடுகள் வழியாகவும் மற்றவர்கள் அனுபவிக்க முடிகிறதே தவிர, இறந்தவரின் உயிரோடு தொடர்புடைய அவற்றை முற்றாக நாம் வாங்கிக் கொள்ள முடியவில்லை.

“ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து”25

“ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து” 26

என்றார் திருவள்ளுவர்.

உலகியற் செல்வங்கள் அறிவறிந்த ஆள்வினையால் படைக்கப்படுபவை; அரசியல் நெறிமுறைகளால் முறைப் படுத்தப்படுபவை-ஒரோவழி, புண்ணிய பாவ உணர்வாலும் முறைப்படுத்தப்படும். செல்வ ஏற்றத்தாழ்வில் வழங்கப்பெறும் சொற்கள் ஏழை-பணக்காரன் என்பதுவே. இந்த ஏற்பாட்டுக்கும் ஊழுக்கும் யாதொரு தொடர்புமில்லை; புண்ணிய பாவத்தினை நினையாமையாலும் முறை செய்யும் அரசின்மையாலுமே ஏழை-பணக்காரன் ஏற்பாடு தோன்று