பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

146

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அது மிகவும் நன்றாகப் பயன்படும். அதனுடைய அளவற்ற ஆற்றல் எண்ணற்ற சாதனைகளைச் செய்யும். மனம், கட்டுப்பாட்டின் கீழ் வர, அதற்கு நல்ல உணர்வுகளை உணவாகத் தரவேண்டும். அதற்கு ஓயாது நல்ல பணிகளைத் தந்துகொண்டே இருக்கவேண்டும். சோம்பிக் கிடக்கின்ற உடலில் உள்ள சோம்பல், மனத்தையும் பற்றுகிறது. சோம்பல் நன்மை செய்யாதது மட்டுமின்றித் தீமையையும் செய்யும். ஆதலால், வாழ்க்கை வளமாக அமைய மனதுக்கு வலிமை சேர்க்கவேண்டும்.

வாழ்க்கை, வெற்றிகள் பொருந்தியதாக அமைய வேண்டும். வாழ்க்கை ஒரு தொடர்ந்த போர்க்களம். மனிதரோடு மனிதர் பொருதும் போர்க்களத்தை நாம் குறிப்பிடவில்லை. ஆனாலும் அது விலக்கப்பட்டதாகக் கருதக் கூடாது. முதல் நிலைப்போர் தன்னுடைய பொறி புலன்களோடு ஒரு நிறை நலத்தை நோக்கிப் பயணம் செய்யும் ஆன்மா நடத்தும் போராட்டம்.

மெய்யுளே விளக்கை ஏற்றி
வேண்டள வுயரத் தூண்டி
உய்வதோர் உபாயம் பற்றி
உகக்கின்றேன் உகவா வண்ணம்
ஐவரை அகத்தே வைத்தீர்
அவர்களே வலியர் சாலச்
செய்வதொன் றறிய மாட்டேன்
திருப்புக லூர னீரே.”

என்று இப்போராட்டத்தைப் படம் பிடித்துக் காட்டுகிறார் அப்பரடிகள்.

பொறிகளின்மீது தனி ஆணை செலுத்தி ஆளும் தன்மையுடையவர்கள் முதலில் தங்கள் நிலையில் வெற்றி பெறுகிறார்கள். தன்னளவில் வெற்றி பொருந்திய ஒரு ஆன்மா, தன்னைச் சுற்றியுள்ள உலகத்துடன் போரிடுகிறது.