பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆலயங்கள் சமுதாய மையங்கள்

147


அந்தப் போரின் நோக்கம் சமுதாயத் தீமைகளாகிய அறியாமையை நீக்குதல், வறுமையை நீக்குதல், பிணியை நீக்குதல், பிரிவினையை நீக்குதல், பகையை நீக்குதல் என்பதேயாம். இது நேரடியாகத் தீமையை எதிர்க்கும் போராட்டமன்று. நன்மையைப் படைப்பதன் மூலம் தீமையை அகற்றுதலே இப்போரின் நோக்கம். அதுதான் சிறந்த போர்த் தந்திரம். அதாவது, அறிவை வளர்த்தல், வளம்பல படைத்தல், உடல் நலம் பேணல், அன்பினால் இணைந்து வாழ்தல், ஒப்பரவு நெறி பேணல், ஒருமைப்பாடுடைய சமுதாயம் காணல் ஆகிய நல்லனவற்றைப் படைப்பதில் வெற்றி பெற்றாகவேண்டும். இந்த வெற்றிகள் மண்ணகத்தை விண்ணகமாக்கும். வாழ்க்கை வளமுடன் அமைய இத்தகு வெற்றிகளைப் பெற்றுக் குவித்திடுதல் வேண்டும். இயல்பாக இந்த வெற்றிகளைப் பெற முடியாதபோது தடையாக இருக்கிற தீயசக்திகளோடும் நாம் போராட வேண்டியிருப்பின் அந்தப் போரினை நிகழ்த்தவும் தயங்கக்கூடாது. தீயசக்திகளோடு சமாதானம் செய்து கொள்வது அறமுமன்று; பொறையுடைமையுமன்று கண்ணோட்டமுமன்று. அது கடமை தவறிய மாபாதகச் செயல் என்பது அறிக. இத்தகைய செருக்களங்களில் நமது வழிபடும் கடவுள்களே போரினை நிகழ்த்தித் தீயோரை ஒடுக்கி வெற்றி பெற்றிருக்கிறார்கள். ஆனால், தீமைகள் மாற்றப்பட்டனவே தவிர, தீயோர் அழிக்கப்படவில்லை; நம்மிடம் பொருதுவோர் அழிக்கப்படுதலை விட அவர்கள் வாழ்க்கையில் மாற்றங்களைக் கொண்டு வந்து பயன்படுமாறு செய்தலே சிறந்த வெற்றி. இத்தகு வெற்றிகளே வாழ்க்கை வளமாக அமையத் துணை செய்யும்.

மானுடத்தின் வரலாறு தொடர்ந்து நிகழ்வது. நேற்று மானுடம் வாழ்ந்தது உண்மை. அதுபோலவே நாளை மானுடம் வாழப் போவதும் மறுக்க முடியாத உண்மை. இந்த நீண்ட நெடிய மானுடத்தின் வரலாற்றில் நிகழ்காலத்தில்