பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

7


மனித குலத்தில் எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கக்கூடிய சமுதாய அமைப்பைத் தம் இலட்சியமாகக் கொண்ட அடிகளார் இத்தகைய சமுதாயத்தை அமைக்கக் கூட்டுறவுத் துறையே ஆவன செய்யும் என்பதை வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் வலியுறுத்தினார். எனினும், இந்தியாவில் அரசாங்கத்தின் இரும்புப்பிடியில் சிக்கியிருக்கும் இன்றையக் கூட்டுறவு அமைப்புகளின் மூலம் இதைச் சாதிக்க முடியாது என்பதை அடிகளார் உணர்ந்திருந்தார். கூட்டுறவு இயக்கங்களை மக்களே கண்டு, தொடக்கத்திலிருந்து நடத்தி, நேரிடையாக என்று பங்கு கொள்கிறார்களோ, பயனடைகிறார்களோ அன்றுதான், கூட்டுறவு இயக்கம் வெற்றி பெறும் என்பதை எடுத்துரைக்க அவர் ஒரு போதும் தயங்கியதில்லை.

ஆதிபத்திய நஞ்சுக்கு மாற்று கூட்டுறவு என்பது அடிகளாரின் நம்பிக்கை. ஏனெனில், கூட்டுறவாளனின் விருப்பமும் விழைவும் பிறர் நலம் சார்ந்ததாகவே இருக்கும். பிறருக்குச் செய்யும் உதவியைக் கடமையாகவே கருதுவான் உண்மையான கூட்டுறவாளன் என்று அடிகளார் விளக்கினார்.

இந்நாட்டில் எல்லாரும் எல்லாமும் பெறச் செய்யும் அரசியலே நமக்குத் தேவை என்பது அடிகளாரின் அரசியல் நிலைப்பாடு.

அரசியலுக்கு ஆதாரம் அறமே என வள்ளுவர் கூறுவதை அடிகளார் அப்படியே ஏற்றுக் கொள்கின்றார். வளம், வறுமையென்னும் வேறுபாடுகளை அகற்றி, பொருளின் காரணமாகத் தோன்றும் ஒழுக்கச் சிதைவுகளை நீக்கி, நிறைவான ஒரு சமுதாயத்தைப் படைக்க முயலும் அரசியலுக்குப் பொருளியலும் அடிப்படை என்பது அடிகளார் கருத்து.

ஒரு சிறந்த நாட்டுக்கு முதல் இலக்கணம் வறுமையின்மை தான். ஆகவேதான், வையத்து மாந்தர்க்கெல்லாம் வாழ்வளிப் பதற்குரிய செல்வப் பங்கீட்டு முறையை, முறையாக நடைமுறைப் படுத்தி வாழ்வளிக்காதது. கொலை செய்யும் குற்றத்துக்கு ஒப்பானது என்று கூறும் குறள்நெறியைத் தமது நெறியாகவே அடிகளார் எடுத்தோதுவார். சமுதாயத்தில் பலரோடு கூடி இசைந்து வாழ்ந்து மனிதகுலக் கூட்டுச் சமுதாயம் அமைந்திட நாடு, மொழி, இனம், சமயம், சாதி வேறுபாடுகளற்ற ஒரு குலம் அமைய உறுதுணையாகச் செயல்படுவதே நல்ல அரசியல் என்று அவர் நம்பினார்.