பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கடவுளைப் போற்று! மனிதனை நினை!

185


மின்னாரும் கொடிமருங்குல்
பரவையெனும் மெல்லியல்தன்

பொன்னாரும் முலைஓங்கல்
புணர்குவடே சார்வாகப்

பன்னாளும் பயில்யோக
பரம்பரையில் விரும்பினார்”

என்று கூறுவதறிக.

சிறந்த கணவன் மனைவியாக வாழ்தல் என்ற அடிப்படையில் சங்ககாலம் தலைவி என்றே குறிப்பிடுகிறது. திருக்குறள் “வாழ்க்கைத்துணை நலம்” என்று பாராட்டுகிறது. சிறந்த மனையற வாழ்க்கையில் பங்கு பெறுவோர் குறைகள் நீங்கிக் குணங்கள் பெற்று ஆன்மநலம் எய்துதல் இயற்கை. ஒரு பெண், தனக்கு வாய்த்தவன் குறைகளையுடைய கணவனாயினும் அவனை நெறிப்படுத்தி, தெய்வ நிலைக்கு உயர்த்தமுடியும். குறைகளைக் கடந்து அன்பு காட்டுதல், தொண்டுசெய்தல், உதவியாக இருத்தல், கலத்தல் முதலிய நிகழ்வுகளின் மூலம் அற்புதமான மாற்றங்கள் விளைகின்றன. திருநீலகண்டர் மனைவாழ்க்கையும், கண்ணகி மனை வாழ்க்கையும் இதற்கு எடுத்துக்காட்டுகள். “குறையிலாதார் யாருமில்லை” என்பது உலகியல் வரலாறு காட்டும் உண்மை. ஆனால் அன்புக்கு, காதலுக்கு, நட்புக்குக் குறை தடையாக அமையாது; அமையக்கூடாது. அப்படி அமையும்படி அனுமதித்துவிட்டால் குறைகள் பல்கிப் பெருகுமே தவிர, அன்பு வளராது; வாழ்க்கை வளராது; வளமாக அமையாது. அதேபோழ்து குறைகளைப் பொருட்படுத்தாத அன்பை சலுகையாக எடுத்துக்கொண்டு கெட்டுப்போகவும் கூடாது. ஆதலால், அன்பின்மை போலக் காட்டுதல், அன்பு வாழ்க்கைக்குக் களை வெட்டிக் காய்ச்சல் காட்டுவது போலப் பயன்தரும். அதனாலன்றோ காதல் வாழ்கையில் ஊடல் தேவையென்று மனையறம் அறிந்தோர் கூறுகின்றனர்.

கு.XII.13.