பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கடவுளைப் போற்று! மனிதனை நினை!

219


இழைத்த தீங்குகள் எழுதிக்காட்ட முயாதவை. இங்கிலாந்து வரலாற்றில் ரோசாப்பூச் சண்டைகளும் இந்திய நாட்டில் முஸ்லீம் படையெடுப்புக்களின்போது இந்துக் கோயில்கள் இடிபட்டமையும் தமிழ்நாட்டில் சைவ-சமணச் சண்டைகளும் எடுத்துக்காட்டுக்கள். இவையெல்லாம் மதச் சண்டைகள் என்று கூறப்பட்டாலும் உண்மையில் மதத்துக்காக மதத்தின் நலத்துக்காக ஏற்பட்ட சண்டைகள் அல்ல! ஆதிக்கத்தின்பாற்பட்ட போட்டிகளும் சண்டைகளுமேயாம்; சைவ சமய நாயன்மார்கள் சமணத்தை எதிர்த்துச் சண்டை போட்டிருந்தால் சமணம் பிறந்த நாள் தொட்டே சண்டை போட்டிருக்கவேண்டும். அதுவல்ல நோக்கம்; அப்பரடிகள் சமண சமயத்திற்கு மாறிச் செல்லும் அளவிற்குச் சமணம் வளர்ந்திருந்தது. எப்போது சண்டைகள் மூண்டன? பல்லவ-பாண்டிய “அரசுகளைச் சமண சமயம் கைப்பற்றிக் கொண்டு தனிமனித சுதந்திரத்தில் தலையிடும் அளவுக்குச் சென்றபின்தான் சமணத்தை எதிர்த்தது சைவம். எது எப்படியாயினும் மதத்தின் பெயரால் நடந்த படுகளப் போர்கள், பெருக்கெடுத்த இரத்த ஆறுகள் இவைகளை வரலாற்று ஏடுகளிலிருந்து மறைக்க முடியாது. அதனால்தான் வள்ளலார் “மதமானபேய் பிடியாதிருக்கவேண்டும்” என்றார். மதங்களைக் கடந்த பொது நெறி கண்டார். அதுவே சன்மார்க்கம்.

இன்று நடைபெறுவது என்ன?

இன்று நாட்டில் நடைபெறும் மதப்போட்டிகள் மதங்களை அனுட்டானங்களாக மாற்றும் போட்டிகள் அல்ல. ஆன்ம ஞானத் தவத்தின் பாற்பட்ட போட்டிகளும் அல்ல. யார் பெரியார்? யாருடைய மதத்துக்குச் செல்வாக்கு அதிகம்? எந்த மதம் இந்தியாவை ஆளுவது? என்ற வினாக்களுக்கு விடை காணும்போட்டிகளே நடைபெறுகின்றன. இவை ஒருபொழுதும் மதத்தை வளர்க்கப் பயன்படா. மத