பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

250

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வளர்கிறது! ஆம்! தீமை தீமையே. ஆயிரம் சமாதானம் கூறினாலும் பேதங்கள் பிரிவுகள் தீமையே. இந்தியாவின் சமயச் சார்பற்ற-சம வாய்ப்புடைய சமுதாய அமைப்பை நோக்கிச் செல்லும் நடைப் பயணத்தினூடே ஊடுருவும் தீமை, நன்மையுள் செயற்படும் தீமையாகும். நன்மையும் நன்மையாகவே நடைபெறவேண்டும். நன்மையினுாடே தீமை ஊடுருவுமானால் அல்லது எதிர்விளைவாகத் தீமை தோன்றுமானால் நன்மையும் நன்மையாகாது. நன்மையாகக் கருதப்பெறும் ஒன்றும் காலப்போக்கில் தீமையாகவே முடியும். தீமை-பிரிவினைத் தீமை-ஒதுக்கி ஒதுங்கும் தீமை மனிதனின் பகையாகும். இத்தீமையை எதிர்த்துப் போராடுதல் மனிதனின் பிறப்புரிமையும் கடமையுமாகும். முதலில் மனிதன் தற்சார்பான தீமைகளை எதிர்த்துப் போராடி வெற்றிபெற்றாக வேண்டும். பின் சமுதாயச் சூழலில் அமைந்துள்ள தீமையை எதிர்த்துப் போராட வேண்டும். அப்போதுதான் மனிதன் நிறைநலம் வாய்ந்த மனிதனாவான்.

இன்றைய உலகம், மதங்களின் பெயரால் கெட்ட போரிடும் உலமாக மாறி வருகிறது. ஆனால் உண்மையில் நோக்கினால், உண்மையான மத நெறியும் மக்கள் மன்றத்திற்கு அறிமுகப்படுத்தப்பெறவில்லை. மதங்கள் தாம் தோன்றிய இடத்திலிருந்து பலகாத தூரம் விலகிவிட்டன. ஏன்? "தன்னுடைய கடவுளையே விழுங்கி ஏப்பமிட்டுவிடும் நிலைக்கு மதங்கள் வந்துவிட்டன” என்று லியோ டால்ஸ்டாய் கூறியது எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது!

மனிதகுலம் தோன்றி வளர்ந்த வகையிலும் வாழ்வியல் அமைப்பிலும் ஒரே குலமாகத்தான் காட்சியளிக்கிறது. நாடு - மொழி - மதம் ஆகியன மனிதனின் படைப்புக்கள்! மனிதனின் படைப்புக் காரணமாக வேற்றுமைகள் தோன்றுவது உண்மை. ஆயினும் மனித குலத்தை உணர்வு நிலையிலும் ஒழுக்க நிலையிலும் ஓர் அணியாக இணைக்கும் நோக்கத்திலேயே நாடு, மொழி, மதங்கள் தோன்றின. ஆனால்