பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

260

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


யமைப்பதின் மூலமே இது செய்யப்படவேண்டும். ஏகதத்துவமாகின்ற அந்த ஒரு சமய தர்மம் உள்ளதே அதனுடைய பல் வேறான வெளித்தோற்றங்களேயாம். உலகத்துச் சமயங்கள் எல்லாம் என்பதை மனித இனத்தவருக்குப் போதிக்க வேண்டும்”20 என்று கூறும் அறிவுரையை இன்றைய மனித உலகம் குறிப்பாக இந்தியா உணரவேண்டும். இன்றைய இந்திய சமூகம் நிழலின் பின் செல்லத்துடிக்கிறது. இது அறவே ஆகாது! ஆகாது! ஒளியின் பின் செல்லவேண்டும். இத்தகு அறிவுரைகள் இயக்க வடிவம்பெற இராமானந்தர், நானக், ஞானேசுவரர், நாமதேவர், சைதன்யர் முதலிய அருளாளர்கள் முயன்றனர். இந்து சமயம்-இஸ்லாமியம் ஆகிய இரு மதங்களின் கொள்கைகளையும் கலந்த ஓர் இயக்கம் உருவாக்கினர்.

மதங்களின் இலட்சியம் ஆண்டவனைக் காண்பதாகவே இருக்கவேண்டும். ஆண்டவன் ஒருவனையே வழிபடவேண்டும். ஒவ்வொருவரும் தமக்கென ஒரு இலட்சியத்தைத் தேர்ந்தெடுத்து, அதில் உறுதியாக நிற்பாராயின் மதம் பற்றிய சச்சரவுகளெல்லாம் மறைந்துவிடும். மதம் வாழ்க்கை முறை. அதனால் மதம் இலட்சியமாக முடியாது. இலட்சியம் என்பது வாழ்க்கையின் குறிக்கோள். இன்றைய இந்தியன் எதை இலட்சியமாக எடுத்துக்கொள்ளவேண்டும்? எண்ணிப்பாருங்கள்!

இன்று இந்தியாவில் எழுதப்படிக்கத் தெரியாதவர்கள் பலகோடி பேர்; நாளும் வறுமையில் நைந்து வாழ்கின்றனர் பலகோடி பேர்; பல நூறாயிரம் இளைஞர்களுக்கு வேலை இல்லை, சாதிப் புன்மைகள் நீங்கியபாடு இல்லை. இந்த அவலங்களை எதிர்த்துப் போராடி வலிமையும் வளமும் உடைய பொலிவான இந்தியாவை உருவாக்குவது மட்டுமே இந்தியாவின் இலட்சியமாக இருக்கமுடியும்; இருக்க வேண்டும் இந்தியாவின் இலட்சியமாக வேறு இருத்தல் இயலாது. கூடாது.