பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

280

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அந்நோயை நீக்கிக் கொள்ளும் வகை யாது? என்றெல்லாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும். இக்கருத்தினையே, தமிழ்ப்பெரு நாவலராம் வள்ளுவர்,

“நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்”

என்று கூறி விளக்குகிறார். நோயினையும், அதன் காரணத்தையும் அது தீரும் உபாயத்தையும், சொல்லுவதே சமயம். எனவே துன்பத்தின் அழிவிலே-இன்பத்தின் தோற்றத்திலே அரும்புவது சமய உணர்ச்சியும் வாழ்க்கையுமாம்.

சித்தாந்தச் செந்நெறி

தமிழகத்தின் தவநெறி சைவத்திருநெறி. தொன்மையான பெருநெறி சைவசித்தாந்தத் திருநெறியேயாம். இத்திருநெறி, மிகப்ழமை உடையதாகவும், உலகப் பொது நெறியாகவும் காட்சியளிக்கிறது.

இது அது என்ற பிணக்குகள் இன்றி, பரந்துபட்ட நிலையில், விரிந்த மனப்பான்மையுடன், அமைந்துள்ள சமயம் சைவம் ஒன்றேயாம். அத்தன்மையினாலேயே, அது உலகப் பொது நெறியாக அமையக்கூடிய தகுதியைப் பெற்றுள்ளது. உலகெங்கும் ஒரு காலத்தில் சைவம் பரவி இருந்தது. சிந்து நதிக்கரையில், மொஹஞ்சதரோ, ஹரப்பா என்னும் இடங்களில், அகழ்ந்தெடுக்கப் பெற்ற புதை பொருள்கள், சைவத் திருநெறியின் தொன்மைக்கு எடுத்துக் காட்டாகும். சிவலிங்கங்களும், அம்மை, கூத்தப்பிரான், தென்முகக் கடவுள் முதலிய திருவுருவங்களும், பிறவும் கிடைத்துள்ளன. இவைகளிலிருந்து, அங்கு கி.மு. நாலாயிரத்திற்கு முன்னரே சைவத் திருநெறி நிலவி இருந்தது என்பதை உணரமுடிகிறது. சிந்துநதி, புதைபொருள்களை ஆராய்ந்த ஓர் அறிஞர்-சர்ஜான் மார்ஷல் (Sir John Morshal),