பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

298

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கின்றனர். அவர்கள் வாழ்க்கையில் நன் மணம் இல்லை. வளமும் இல்லை. இப்பகுதியினரில் பலர்தான் பிற மதம் புகுந்தவர்கள். இன்னும் ஒரு சிலரே எஞ்சியிருக்கின்றனர். அவர்களையும்கூட புத்தர்களாக ஆக்கப் பாடுபடுகின்றார் ஒருவர். அதே காலத்தில் இந்தியப் பேரரசு அவர்களுக்கு எல்லா வகுப்பினரோடும் உடனிருந்து வாழ்வதற்குரிய உரிமையைச் சட்ட ரீதியாக வழங்கியுள்ளது. அவர்கள் அடியெடுத்து வைக்கக் கூடாதென்றிருந்த ஆலயங்களில் அச்சமின்றி நுழைய உரிமை வழங்கப்பட்டுள்ளது. எனவே நாம் நமது பழக்கத்தை மாற்றிக் கொண்டு சேரிகள்தோறும் நுழைந்து பரிவோடு அவர்களை அணுகி அவர்களது துன்பம் துடைத்து அவர்களது உணர்ச்சியிலும் வாழ்விலும் சமயத்தைக் கலக்க வேண்டும். இந்தப் பணியால் இரண்டு நன்மை விளைகிறது. ஒன்று சமயத் தொண்டு, மற்றொன்று சமூகத் தொண்டு. இத்தகு பணியால் தமிழினமே உயர வழியுண்டு. ஒவ்வொரு சேரியிலும் என்று பிரார்த்தனை ஒலி எழுகிறதோ அன்றே சமயத்தின் நன்னாள்.

இந்த நூற்றாண்டை மேடை நூற்றாண்டென்று சொல்லிவிடலாம். எதற்கெடுத்தாலும் மேடைச் சொற் பொழிவு, அலங்காரமான நடையில் ஒரு சில மணி நேரங்கள் பேசினால் மக்களை ஈர்த்துக் கவர்ந்துவிடலாம், என்ற நம்பிக்கை வளர்ந்துள்ள காலம் இது. அப்படியே நடந்து வருவதையும் நாம் அறிவோம். எனவே நாமும் சிறந்த சமயச் சொற்பொழிவாளர்களைத் தயாராக்க வேண்டும். அவர்களின் சொல்லாற்றலைப் பெருக்க வேண்டும். மூலை மூடுக்களிலெல்லாம் நின்று சமய வாழ்வின் நல்லியல்புகளை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். மாறுபட்டவர்களின் மாறான பேச்சுக்களை உண்மையை எடுத்துக் காட்டுவதின் மூலம் மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும். சமயத் தொண்டர்கள் மேடையோடன்றி வாழ்க்கையிலும் பண்பட்டவராயிருத்தல் வேண்டும். இத்தகு தொண்டர்கள்