பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மனம் ஒரு மாளிகை

309


நிற்கக்கூடாது. தந்தை தாயாரைத் தீண்டி, மெய்தொட்டுப் பயின்று மகிழ்வதைத் தடைசெய்ய எவருக்கு உரிமை உண்டு?

நந்தம் திருக்கோயில்களில் உள்ள திருமேனிகளை எல்லா நாட்டினரும், எல்லா மொழியினரும், பலரும் நீரும் பூவுமிட்டுத் தொட்டு மகிழ்ந்து வழிபாடு செய்யும் உரிமை வேண்டும்; அன்றைக்கே இந்த உரிமை மலரும் நாளிலேயே மதம் மன்பதை மதமாகும். அதுவரையில் கோயில் “மதமாகவே” இருக்கும்.

உலகுக்கு முதல்வன் தலைவன் கடவுள். மனித உலகம் இன்புற்று மகிழ்ந்து வாழ இந்த உலகில் எத்துணையோ கோடி இன்பங்களை வைத்திருக்கிறான் இறைவன், “எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா” என்று பாரதியும் பாடினா னன்றோ!

இன்பங்களைத் துய்த்து மகிழ்வதில் மேடு ஏன்? பள்ளம் ஏன்? ஏழை ஏன்? பணக்காரன் ஏன்? இறைவன் இந்த வேறுபாடுகளைத் தோற்றுவிக்கவில்லை.

எல்லா உலகமும், எல்லா உயிர்களும் “இன்புற்றிருக்க நினைப்பதுவே யல்லாமல் வேறொன்றறியேன்” என்ற தாயுமானாரின் கோட்பாடு எங்கே? எல்லாருடைய இன்பத்தையும் நாமே சூறையாடிக் கொண்டு தாமின்புறுதலிலேயே தலை நாட்டமுடையோர் கையில் சிக்கியிருக்கும் மதம் எங்கே?

‘பிறிதின் நோய் தன் நோய்போல் போற்றுதல்’ மதத்தின் ஒழுக்கம்; மதத்தின் கொள்கை உண்மையான மதம் உலகில் கால் கொள்ளுமாயின் போர் ஏது? பற்றுக்கோடல் ஏது? இன்றைய மன்பதை உலகத்தில் மதம், காரணங்களாகக் கால் கொண்டிருக்கிறதே தவிர, ஒழுக்கங்களாகக் கால் கொள்ளவில்லை.

இன்றைய மனித உலகத்திற்குத் தேவை மிக உயர்ந்த புதுமையும் பொதுமையும் உடைய மதத்தின் கொள்கையே.