பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/366

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

354

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


உயிர்ப்புடன் இயக்கவும் முன் கைகொடுத்து முயற்சி எடுத்தனர். இந்தப் பேரியக்கம் திருமூலர் முதல் வள்ளலார் வரையில் வளர்ந்து வந்தது. மனிதர்களை நடமாடும் கோயில் என்று வர்ணித்தது; அது மட்டுமா? நடமாடும் மனிதர்களாகிய கோயில்களுக்கு வழங்கினால் இறைவனுக்கு ஆகும் என்றது. நடமாடும் கோயிலாகிய மானுடத்தைப் பேணுதலே சமுதாயத் தொண்டு.

ஒரு மனிதன் தனது பொறி புலன்களைப் பக்குவப்படுத்திப் பலருக்கும் பயன்பட வாழ்தலே சமய வாழ்க்கை மற்றவர்க்குப் பயன்படாதன எல்லாம் தற்சார்புடையன. அவையெல்லாம் காலப்போக்கில் அழியும். ஆதலால் மானுடத்தை முழுமையாக வளர்த்து உயிர்க்குலத்திற்கு அர்ப்பணிப்பதே சமயத்தின் குறிக்கோள். இக்குறிக்கோள்வழி சமயம் பேணப் பெற்றால் சமயம் வளரும்; சமுதாயம் வளரும்.

சமுதாயம் என்பது பலர் கூடி வாழும் ஒரு சமூக அமைப்பு. சமுதாய அமைப்பில் உள்ள ஒவ்வொருவருடைய ஆன்மாவும் செழித்து வளர்ந்தால்தான், சமுதாயம் செழிப்படையும். ஆதலால் சமயத்திற்கே அடிப்படை உறுப்பு சமுதாயம்தான். எனவே, சமுதாயத்தை வளர்ப்பது சமூகத் தொண்டே தான். காலத்தால் பிந்திய பிற்போக்குவாதிகள் தொண்டினை இரண்டாகப் பிரித்தனர். ஒன்று சிவத்துக்குச் செய்வது பதித்தொண்டு, பிறிதொன்று பசுத் தொண்டு - அதாவது உயிர்களுக்குச் செய்வது. இதனால் காலப்போக்கில் சிவத்திற்கு அஞ்சியாயினும் அன்புபட்டாயினும் தொண்டு செய்யத் தலைபட்டனர். உயிர்களுக்குச் செய்வதை அதாவது பசுத்தொண்டைக் கைவிட்டனர். இது பெரும்பிழை. பசுக்களுக்கு - உயிர்களுக்குச் செய்தாலும் திருவருள் சிந்தனையுடன் பாத்திரம் என்று எண்ணிச்செய்யின் அதுவும் சிவத்தொண்டேயாகும்.