பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/367

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழமுது

355



இறைவன் உயிர்கள் வளர்ந்து வாழ்ந்து உயர்வு பெற, உய்தி அடைய உயிர்களுக்குக் கருவி, கரணங்களை வழங்குகின்றான். இந்தக் கருவி கர்ணங்களுக்குரிய துய்ப்புகள் தடையிலாது கிடைக்கச் செய்து துய்க்கச் செய்வது தொண்டு ஆகும். உடலுடன் பொருந்தியுள்ள அறிவுக் கருவிகள், அறிவறிந்து இயங்கத் துணை செய்தல் தலையாய தொண்டு. கொடையில் சிறந்தது அறிவுக் கொடையே. பொது நூல்களைக் கற்றவும், ஞானநூல்களை ஒதவும், தெளிவு பெறவும் உரியன செய்தல் ஒப்பற்ற சமயத் தொண்டு. இறைவன், சொல் எடுத்துக் கொடுத்த வரலாறும், நாளும் இன்னிசையால் தமிழ் கேட்க விரும்பியதும் அறிவு வளர்ச்சிப் பணியின் பாற்பட்டதேயாம்.

“பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை” என்றது திருக்குறள். ஆம்! உண்பனவும் தின்பனவும் உடுத்துவனவும் உயிர்ப்பனவும் இல்லாது போயின் எங்ஙனம் வாழ்க்கை இயங்கும்? ஆதலால் தின்கின்ற சோறும் பருகுகின்ற நீரும் வெற்றிலை பாக்கும் கொடுப்பது சிறந்த சமூகத் தொண்டு; சமயத் தொண்டுமாகும். இறைவன் பொதி சோறு சுமந்து கொண்டு சென்று அடியார்களுக்குக் கொடுத்த வரலாற்றினை அறிக அது போலவே அடியார்களாகிய சிறுத் தொண்டரும், இளையான்குடி மாறரும் சோறளித்துச் சோறு பெற்ற வரலாற்றினை உணர்க!

வாழ்க்கை என்பது பொன்னால் மட்டும் ஆவது அல்ல. பொருளும் அதற்குத் தேவை. வாழ்க்கை என்பது பொருளால் மட்டும் ஆவதல்ல. மனிதருக்குப் பொருளும் கருவியே. இன்பம் வேண்டும்; “இறைவன் கழலேத்தும் இன்பமே இன்பமல்ல” என்று தமிழ் வழக்கு கூறுகிறது. ஆயினும் தமிழ் மரபில் இன்பம் என்று கூறினால் அது காமஞ்சான்ற இல்வாழ்க்கையைக் குறிக்கும். தமிழ் மரபில் பெண் பெருமைக்குரியவள். அறம் என்று மனையறம் பாராட்டப் படுகிறது. பிற்காலத்தில் அயல் வழக்குகளின் தாக்கத்தால்