பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/372

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

360

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


யிலேயே உலகத்தை வலம் வருகிறார். ஒருவர்-கணபதி அம்மையப்பனை வலம் வருகிறார். அம்மையப்பனை வலம் வந்தவருக்குக் கனி கிடைத்துவிடுகிறது. ஆம்! தன்னை நாடி மதித்தவருக்குப் பரிசில்கள் தருவது என்கின்ற மானுடத்தின் தற்சார்பு-தற்போத நிலையின் தாக்கம்-அம்மையப்பனுக்கு! திறமை புறக்கணிக்கப்பட்டுவிட்டது. இந்த நிலையில் உள்ள மானுடம் மிகவும் தாழ்ந்த நிலையினதாகும். இந்த இடத்தில் - வீழ்ந்து கொண்டிருந்த மானுடத்தைத் தடுத்து நிறுத்தி உயர்நிலையில் உய்த்துச் செலுத்த எம்பெருமான் முருகன் திருவுள்ளம் கொண்டான்; துறவியானான்; முருகன் மேற்கொண்ட துறவி விரக்தியால் ஏற்றபட்டதன்று; விவேகத்தினால் ஏற்பட்டது. முருகன் ஏற்றுக் கொண்ட துறவு மோட்சத்தைக் கருதி ஏற்றுக் கொண்ட துறவன்று. மண்ணகத்தை விண்ணமாக்க ஏற்றுக் கொண்ட துறவு.

மண்ணில் மாந்தர்கள் கலகம்செய் மாந்தர்களாக வாழ்தல் கூடாது. ஒருவர் எல்லாருக்காவும் என்று வாழ்தல் வேண்டும். அப்பட்டமான நிர்வாணமான தன்னலத்தைத் துறக்க வேண்டும். வையகம் உண்ண, உண்ணவேண்டும். வையகம் உடுத்த, உடுத்த வேண்டும். இத்தகு சமுதாயத்தைக் காண மனம் பழமாதல் வேண்டும். மனம், அன்பில் பழுக்கவேண்டும். பழுத்த மனத்தடியார்களானால் சமுதாய ஆர்வம் தோன்றும்; பிறர்க்கென முயலும் நோன்பு தலைப்படும். வையகம் வளரும்; வாழும்.

இத்தகு அருமையான வாழ்வியல் தத்துவத்தைக் கற்றுத் தரும் பழநிமலை வாழ்க! பழநியில் எழுந்தருளியுள்ள நமது வாழ்முதல் வாழ்க!


சமரசம்

தமிழ் நாகரீகம் சமநிலைச் சமவாய்ப்புச் சமுதாயத்தைக் குறிக்கோளாக உடையது. அந்நெறியிலேயே முயன்று வாழ்ந்த பெருமை தமிழினத்துக்கு உண்டு.