பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆலயங்கள் சமுதாய மையங்கள்

31


மதுரையில் எழுந்தருளியுள்ள ஆலவாயண்ணல், மாமனாக வந்து வழக்குரைத்து நின்றமையையும் அறிக. ஆதலால், திருக்கோவில்கள் கடவுளின் திருக்கோயில்களாக மட்டுமல்லாமல் நீதிதேவதையின் திருக்கோயில்களாகவும் விளங்கின.

களவியலுக்கு வாயில்

தமிழர்கள் வாழ்க்கையை நன்றாகப் புரிந்து கொண்டவர்கள்; வாழ்வாங்கு வாழ விரும்பியவர்கள். தமிழர் தம் உணர்வுக்கு ஏற்றவாறு திருக்கோயிலும், திருக்கோயிலை ஆட்கொண்டிருந்த கடவுள் தத்துவமும் தொழிற்பட்டன. பெண்களைப் பெருமைப் படுத்தும் அகனைந்திணை வாழ்க்கை தமிழர்க்கே உரிய சிறந்த மரபு. மதுரையில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியுள்ள இறைவன், ஆணும் பெண்ணுமாக இணைந்து காதல் செய்து வாழ்கின்ற நெறியினைக் கூறும் அகப்பொருள் இலக்கணத்தையே அருளிச் செய்தான் என்பர். அந்நூல் ‘இறையனார் அகப்பொருள்’ என்னும் பெயர் பெற்றது. திருக்கோயிலைச் சார்ந்து களவொழுக்கமும் கற்பொழுக்கமும் வளர்ந்தன. இறைவனே பெண்பால் உகந்து வாழ்ந்தான்; போகமும் செய்தான். இதுவே திருக்கோயில் வளர்ந்த வாழ்க்கைத் தத்துவம். அதனால் அகனமர்ந்த மனையறத்திற்கு மாறாக வாழ்பவர்கள், பெண்ணைத் துறந்தவர்கள் திருக்கோயில் பூசனைக்கே யுரியவரல்லர் என்ற நியதி எழுந்தது. திருக்கோயில் வளாகத்திலேயே களவியல் ஒழுக்கத்திற்குரிய வாயில்கள் கிடைத்தன. சுந்தரர் பரவையாரைத் திருவாரூர்த் திருக்கோயிலில் கண்டு காதல் கொள்கின்றார். அங்ஙனமே பரவையாரும் காதல் கொள்கின்றார். திருக்கோயிலைச் சார்ந்து வளர்ந்த காதல் தத்துவத்தில், ஊனுடம்பின் கவர்ச்சியில்லை; அகனமர்ந்த காதல்; அருட்சார்புடைய காதல் இருந்தது. சுந்தரர் பரவையார் காதல் எப்படியிருந்தது?