பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/434

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

422

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



இயற்கை ! இஃது இறைவனின் மறுபெயர். இயற்கையின் விரிவு பசிய சோலைகள்! மலர்க்காடுகள்! அம்மம்ம! மலரின் எழிலும் வண்ணமும் கைபுனைந்தி யற்றாக் கவின்பெறு வனப்பாகும். மலரினுள்டே மண்டிக் கிடக்கும் தண்ணளியும் மணமும், மலரினுள் தேனும் இறைவனைக் கைதேர்ந்த சிற்பி என்று பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன. சிற்பி, சிற்பத்தினுள் உறைகின்றான்! இறைவன் மலராக இருக்கின்றான். “வாசமலரெலாம் ஆனாய் நீயே!” என்பார் அப்பரடிகள். “பார்க்கின்ற மலரூடு நீயே யிருத்தி, பனிமலர் எடுக்கவும் நண்ணுகிலேன்” என்பார் தாயுமனார். ஆம் ! மலராக-மலரினுள்ளே மணமாக மலரினால் விளையும் மகிழ்வாக இறைவன் இருக்கின்றான். இவ்வண்ணம் கண்டு ஏத்திடுக!

ஓசையும் ஒலியும் இயல்பில் இன்பமூட்டுவன. முறை தவறினால் இன்பம் தருவதுகூட ஏதம் விளைவிக்கக்கூடும். ஒலியை முறையாக நிரல்படுத்தி ஒலித்தால் அவ்வொலி இன்பம் தரும். அதுவும் பறையில் ஒலியெழுப்பினால் பறந்து திரியும் நெஞ்சம் உள்ளொடுக்கி ஒன்றி நினைக்கும். அதனாலன்றோ, “ஓசை ஒலியெலாம் ஆனாய்” என்றார் அப்பரடிகள். பறை தரு முறை ஒலியில், இதயம் தழுவும் இசையொலியில் இறைவனுள்ளான் என எண்ணித்தொழுக!

இறைவன் மீதுள்ள தணியாக் காதலால் அவனுக்குப் பொருள்களைப் படைக்கின்றோம். அப்பொருள் ஏது? அவனாற்றலால், அவனருளால் விளைந்தவை! அவைகளாகவே அவனிருக்கிறான். திருவிளக்கை ஏற்றி வழிபடுகின்றோம். ஆனால் அவனையே சூழொளி விளக்காக கருதுகின்றார் மாணிக்கவாசகர். பழங்களைப் படைக்கின்றோம். அப்பழத்திடையில் சுவையாகக் காண்கிறார் அப்பரடிகள். எனவே, அந்தப் பொருள்கள் வேறல்ல, அவன் வேறல்ல. அறிந்து ஏத்துக!