பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/438

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

426

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



இத்தகு உயர்ந்த அருள் நலம் கொழித்திடும் அன்பினை அன்றாட வாழ்வில் அகத்திலும், புறத்திலும் கண்டு வாழ்வித்து வாழ்வோமாக.

“அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.”

“மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன்
ஆகுல நீர பிற.”


சமயங்களின் பொது நீதி

நிலத்தின் கடினத் தன்மையை இளக்கி, நெகிழச் செய்து பயன்படு பொருள்களின் விளைவுக்குத் தகுதியாக்குவது உழவு. சுவையுடையனவாக, ஆனால் சுவைக்க முடியாதனவாக ஒன்றோடொன்று மாறுபட்ட சுவையுடையனவாகிய பொருள்களைச் சுவைத்தற்குரிய சுவையுடையனவாக ஆக்குவது சமைத்தல். அவன் ஐந்திணை இன்பத் துய்ப்பிற்கு எழிலுறு பருவம் எய்துதலைச் சமைதல் என்று கூறுவது தமிழ் வழக்கு. அதுபோல மதனித உள்ளங்களை இன்ப அன்பின் வினைநிலமாகத் தகுதிப்படுத்திப் பக்குவப்படுத்தும் தத்துவத்திற்கு-வாழ்க்கை முறைக்குச் சமயம் என்பது பெயர். மனித வாழ்க்கையைச் சமைத்துப் பக்குவப்படுத்துவதே சமயத்தின் நோக்கம்.

இந்த விழுமிய நோக்கத்தோடு, பரந்த நிலவுலகத்தின் கண், தோன்றியுள்ள சமயங்கள் பலப்பல. சமயங்கள் பலப்பல வாயினும் அவையனைத்திற்கும் நோக்கம் ஒன்றேயாம். ஓர் இசையரங்கில் பலர் பல வாத்தியங்களை இயக்கி இசையெழுப்புகின்றனர். அங்ஙனம் எழுப்பும் இசையொலி வேறு வேறு ஒலியமைப்புடையனவேயாம். ஆயினும், சுருதி, பண், தாளம் மாறுபடாது என்பதை நினைவில் கொள்ளல் வேண்டும். அது போலவே, சமயங்கள் மொழியால் மாறுபடலாம். காட்டும் கடவுளின் பெயர், வடிவம் மாறுபடலாம்.