பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/462

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

450

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


மானிடசமுதாயத்தில் சகோதரத்துவத்தை வளர்க்க உறுதி பூண்டிருந்தான்! நாமும் இராமநவமியின் சிந்தனையில் சகோதரத்துவத்தைப் பேறுவோமாக!

இராமன், யாரோடும் பகை கொண்டதில்லை. இராவணனுடன் கூட இராமனுக்குப் பகை இல்லை. இன்று நமது சமுதாயம் இந்த நெறியைப் பின்பற்றுகிறதா ? இல்லையே! சின்னச்சின்னச் செய்திகள், கருத்து வேற்றுமைகளுக்காகக் கூட இன்று பகை கொள்கின்றனர்; குண்டுகளை வைத்து அழிவு செய்கின்றனர். இராமநாமம் உச்சரிக்கும் நாம், நம் இதயத்தில் பகைமையையும் கையில் வன்முறை ஆயுதங்களையும் வைத்திருக்கிறோம் : இராமநவமிச் சிந்தனையில் இவற்றைத் தவிர்த்திடுவோம்! நாடு, மொழி, இனம், மதம் கடந்த ஒருகுலம் காணப் போராடுவோம்! கூடி உழைப் போம்! கூடி வாழ்வோம்!

இராம காதையின் நோக்கம் சிறையிருந்த செல்வியின் ஏற்றம் பேசுவது என்பர். இராவணனுடைய நாட்டில் தன்னந்தனியாகக் கற்புத்தவம் செய்தாள் சீதை! இராவணனுடன் விவாதப்போர் நடத்தினாள்: அந்தத் துணிவு அன்று சீதைக்கு இருந்தது. இன்றோ நமது மகளிர் தற்கொலைகளை நாடுகின்றனர். ஏன், நமது நாட்டு மகளிர் கோழைகளானார்கள்? வாழப் பிறந்தவர்கள் ஏன் சாகிறார்கள்? இராமநவமியின் போது இதுபற்றிச் சிந்தனை செய்வோம்! மகளிரை வாழவிடுவோம்! மகளிர் குலமே! வாழத் தலைப்படுங்கள்! நடையில் உயர்ந்த நாயகன் இராமன் நினைவில் பதவியை நாடாது பணியை நாடுவோம்! அனைவரும் ஒரு குலத்தவராக வாழ்வோம்! யாரோடும் பகை வேண்டாம்! மகளிரை வாழவைப்போம்! இதுவே இராமனுக்குச் செய்யும் வழிபாடு!