பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/475

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புராணங்களைப் புதுப்பிப்போம்

463



மயிலை, கபாலீசுவரர் திருக்கோயில் திருக்குளத்தில் தண்ணீரே இல்லை. இத்தனைக்கும் இந்த ஆண்டு நல்ல மழை பெய்தது. மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தண்ணீர் கொண்டுவந்து நிரப்ப முயற்சி செய்தார். அதற்கும் எதிர்ப்பு வந்தது. தமிழ்நாட்டின் பல திருக்கோயில் திருக்குளங்களுக்கும் இதே நிலைதான். குறிப்பாக மதுரை மீனாட்சி யம்மன் திருக்கோயில் பொற்றாமரைக் குளம் வறண்டு கிடக்கின்றது. கமலாலயத்திற்கு வரும் தண்ணிருடன் வீடுகளின் கழிவு நீர் கலக்கிறது. கமலாலயமே தூய்மையாகப் பேணப்பெறவில்லை. பொதுச் சுகாதார உணர்வு நமது மக்களுக்கு என்று வருமோ?

இந்த அவலநிலையை நீக்க ஏன் தண்டியடிகள் நாயனார் அடிச்சுவட்டில் திருக்குளப் பணி செய்யக்கூடாது? இந்த அடிப்படையில் புராண வரலாற்றுக்குப் புத்துயிர்ப்புத் தரலாம் என்பது எண்ணம். எதிர்வரும் 21-3-93ல் தண்டியடிகள் நாயனார் திருநாள் வருகிறது. ஆயத்தமாகுங்கள்! அவரவர் ஊரில் உள்ள திருக்கோயில் திருக்குளங்களைத் தூய்மை செய்வோம்! திருக்குளங்களுக்குத் தண்ணீர்வரும் வரத்துக்கால்களை ஆழப்படுத்துவோம்! கரை எடுத்துக் கட்டுவோம்! துய்மை செய்வோம்! திருக்குளங்களைத் துய்மை செய்வோம்!

இந்தப் பணியைச் செய்வதன் மூலம் திருக்கோயில் உள்ள ஊரில் சுற்றுப்புறச்சூழல் காப்பாற்றப்பெறும். குறிப்பாகக் காற்றில் ஈரத்தன்மை இருக்கும்; நிலத்தடி நீர் பரமாரிக்கப்பெறும். நல்ல பணி! தவறாமல் செய்வேண்டிய பணி.

அனைவரும் பங்கேற்க வேண்டும்!