பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/489

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



ஆன்மிகம்

477


பூரண வளர்ச்சி பெறவேண்டும் என்பதே ஆன்மிகத்தின் குறிக்கோள். இன்று இந்த ஆன்ம வளர்ச்சியை - பூரண வளர்ச்சியைச் சிந்தனை செய்கின்றவர்களே அருகிவிட்டனர். எங்கும் பிரார்த்தனைகள் கூடத் தன்னலத் தொடர்புடையதாகவே நடத்தப்படுகின்றன. இலாபம் பார்த்தல், இவறிக்கூட்டுதல் ஆகியன இன்றைய மனித உலகத்தின் இலட்சியங்களாகவிட்டன. இதன் காரணமாகப் பலர், பல ஆன்மாக்கள் அழகு உணர்ச்சி, அன்பு செய்தல், ஈதல் ஆகிய நற்பண்புகளை இழந்துவிட்டு வெறும் ‘அகந்தை’யுடையவர் களாகவே காட்சியளிக்கின்றனர். சூரபதுமன் வரலாறு முடிந்ததாகத் தெரியவில்லை; தொடர்கிறது.

இன்று எங்கும் நிலவி வரும் உணர்வு, ஒருமைநிலை உணர்வு அல்ல. “நாம் வேறு; பிறர் வேறு” என்ற உணர்ச்சியே வளர்ந்து வருகிறது. சாதி, மதம், இனம், அரசியற் கட்சிகள் இவற்றுக்கு இடையில் வளரும் வேற்றுமை உணர்வுகளையும் அவைகள் மனிதத்தை, மனிதப் பண்பாட்டை அரிமானம் செய்து வேற்றுமைப்படுத்தி வரும் அநாகரிகத்தையும் காண, கேட்க நெஞ்சு பொறுக்கவில்லையே! ஆத்திரம்தான் வருகிறது. மனிதன் இன்றுள்ளதுபோல என்றுமே வேற்றுமைப் பட்டதில்லை; அந்நியப்பட்டதில்லை. ஒரோவழி, மனத்தாலும் உடலாலும் துன்புறுத்தி இணைப்பை ஏற்படுத்தினாலும் அஃதொரு வழிப்பட்ட அடிமைத்தனமாகவே இருக்கிறது; விளங்குகிறது;

இன்றைய மனிதன் விருப்பப்படி நடப்பதுதான் சுதந்திரம் என்று அறிந்து வைத்துள்ளான். பாவேந்தன் கூறியதைப்போலத் தன் பெண்டு, தன் பிள்ளை என்ற கடுகுப் புத்தியுடையவர்கள் எண்ணிக்கை மிகமிக உயர் நிலையிலிருந்து அடிமட்டவரையில் பெருகி வளர்ந்து வருகிறது. இதைக் காட்டுமிராண்டித்தனம் என்று கூடக் கூறலாம்.